’காதலில்லாமல் எதுவுமில்லை; காயப்படாமல் வாழ்வுமில்லை’ என்பான் ஒரு கவிஞன்.
ஆம், அத்தகைய உணர்வுமிக்கது காதல். உலகம் முழுவதும் இரு மனங்களை இணைக்கும் வலுவான சக்தி காதலுக்கே உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும், எந்தக் காதலும் இனம், மதம், மொழி பார்ப்பது அல்ல. அதனால்தான் இன்றளவிலும் காதல், அனைத்து எல்லைகளையும் வேறுபாடுகளையும் வரையறைகளையும் தாண்டி நிற்கிறது. பல காதலர்களை வாழவைத்தப்படி இருக்கிறது.
தங்களுடைய காதலுக்கு எதிர்ப்பு உருவாகும் சூழலில், அதிலிருந்து சிலர் வெளியேறி, சுதந்திரக் காற்றைச் சுகமாய் நேசித்து சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து வாழ்வில் வெற்றிபெற்றுள்ளனர். அந்த வகையில், மலேசியாவைச் சேர்ந்த ஓர் இளம்பெண், பல கோடி சொத்துக்களையும், பெற்று வளர்த்த பெற்றோரையும் தூக்கி எறிந்துவிட்டு, தன்னைக் காதலித்த நபருக்காக அவருடன் இணைந்து வாழும் காதல் கதைதான் தற்போது உலகளவில் பேசுபொருளாகி இருக்கிறது. இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மலேசியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தொழில் அதிபர் கூ கே பெங். மலாயன் யுனைடெட் இண்டஸ்ட்ரீஸின் தலைவராகவும் உள்ளார். கூ கே பெங் 2015 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் மலேசியாவின் 50 பணக்காரர்களில் 44வது இடத்தைப் பிடித்தார். அவரது சொத்தின் நிகர மதிப்பு 300 மில்லியன் (ரூ. 2,484 கோடி) அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவருடைய மனைவி பாலின் சாய். இவர் முன்னாள் மிஸ் மலேசியா அழகியாவார். இவர்களின் ஒரே மகள் ஏஞ்சலின் ஃபிரான்சிஸ்.
இவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த சக மாணவரான ஜெடிடியாவை காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஏஞ்சலின் ஃபிரான்சிஸ், தனது காதலைப் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காதலர் பற்றிய தகவல்களை அறிந்த ஏஞ்சலின் குடும்பத்தினர், அவருடைய காதலை ஏற்க மறுத்துள்ளனர். பணம், சொத்து, அந்தஸ்து போன்ற காரணங்களைக் காட்டி, ஏஞ்சலின் காதலை அவரது தந்தை புறக்கணித்ததுடன், காதலை கைவிடும்படியும் எச்சரித்துள்ளார்.
இதையும் படிக்க: நாங்குநேரி: பாதிக்கப்பட்ட மாணவர், பள்ளியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு!
பணத்தைப் பார்த்து வருவதா காதல், மனத்தைப் பார்த்து வருவதுதானே காதல்? அதைத்தானே உலக காவியங்கள் எடுத்துரைக்கின்றன.
ஆனால், ஏஞ்சலின் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார். மணந்தாலும், இறந்தாலும் அது காதலர் ஜெடிடியாவோடுதான் என்ற உறுதியில் இருந்தார். அதுதானே உண்மையில் காதல்! பணத்தைப் பார்த்து வருவதா காதல், மனத்தைப் பார்த்து வருவதுதானே காதல்? அதைத்தானே உலக காவியங்கள் எடுத்துரைக்கின்றன.
காதல் விஷயத்தில் பிடிவாதமாக இருந்த ஏஞ்சலின், ’நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வோம்’ எனவும் தந்தையிடமும் தெரிவித்துள்ளார். இதனால் தந்தை - மகள் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. தந்தை - மகள் இடையே நிலவும் பாசம் என்பதே அழகானது; அதிசயமானது. ஆனால், அதையே காதலருக்காக விடும்போது, அதைவிடக் கொடுமை வேறெதுவும் இல்லை. காரணம், பாசத்தைவிட அங்கே காதல் சிறந்ததாக தெரிகிறது. அதிலும் உண்மைக் காதல், உயர்ந்தாக இருக்கிறது. உண்மைக் காதலுக்கு எந்த தியாகத்தையும் செய்யலாம் என்கிற நோக்கில் மிகவும் துணிச்சலான முடிவை எடுத்தார் ஏஞ்சலின்.
ஆம், தன்னைப் பேணிக்காத்து வளர்த்தெடுத்த பெற்றோரையும், பெயர் சொல்லுமளவுக்கு பிரபலமாக விளங்கிய சொத்துகள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு, அந்த ஒற்றை உயிருக்காக வீட்டைவிட்டு வெளியேறினார், ஏஞ்சலின். அவர், தாம் விரும்பிய காதலரை எந்த நிலையிலும் கைவிடாது உறுதியளித்தப்படியே கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடி, இறக்கை விரித்து இனிய பொழுதுகளை இத்தனை ஆண்டுகளாய்க் கழித்துவரும் வேளையில், அவர்களுடைய காதல் கதை வெளியுலகுக்குத் தெரியவந்ததே ஏஞ்சலின் பெற்றோரால்தான்.
அவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட அவர்களது அழகான குடும்பக் கதையை எடுத்துரைத்தார். தந்தை தொழிலை கவனித்த நிலையில் குடும்பத்தை தாய் கவனித்ததாகக் கூறி மலரும் நினைவுகளைப் பகிர்ந்தார். தந்தை பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருந்தபோது, குடும்பத்தை பார்த்துக்கொண்ட தனது தாய்க்கு ஆதரவாக ஏஞ்சலின் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் அவர்கள் மீண்டும் ஒன்றாக சேருவார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வேளையில்தான், ஏஞ்சலினின் கதையும் காதலைப் பற்றிய அவரது நேர்மறையான கருத்தும் உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்துள்ளது. தனது குடும்பத்தின் ரூ.2,484 கோடி சொத்தை புறம்தள்ளி காதலனை கரம்பிடித்த தகவல் உலா வந்து உலகையே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பேசுபொருளாகி இருக்கிறது. இதனால், ஏஞ்சலின் உலகம் முழுவதும் பாராட்டு மழையிலும் நனைந்து வருகிறார்.