உலகம்

“நீ பற்ற வைத்த நெருப்பொன்று..” - மகிந்த ராஜபக்சவின் சகோதரரின் வீட்டுக்கு மக்கள் தீவைப்பு

“நீ பற்ற வைத்த நெருப்பொன்று..” - மகிந்த ராஜபக்சவின் சகோதரரின் வீட்டுக்கு மக்கள் தீவைப்பு

ஜா. ஜாக்சன் சிங்

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவின் வீட்டுக்கு அந்நாட்டு மக்கள் இன்று தீ வைத்தனர்.

இலங்கையின் பொருளாதார சீர்குலைவுக்குப் பொறுப்பேற்று அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி, அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில், நேற்று வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் போராட்டக் களத்தில் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். 231 பேர் காயமடைந்தனர்.

மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களின் இந்த செயலால் ஆத்திரமடைந்த மக்கள், அவரது பூர்வீக வீட்டுக்கும், அமைச்சர்கள் உள்பட 35-க்கும் அதிகமான அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர். மக்கள் போராட்டம் இந்த அளவுக்கு பூதாகரமாக மாறும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை நேற்று நள்ளிரவு ராஜினாமா செய்தார். இதையடுத்து, மக்களிடம் சிக்காமல் இருப்பதற்காக அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ராஜகபக்ச குடும்பத்தினரை தேடிச் சென்ற மக்கள், அவர்கள் கிடைக்காத ஆத்திரத்தில் மல்வானை பகுதியில் உள்ள ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவின் வீட்டுக்கு தீ வைத்தனர்.

என்ன நடந்தது இலங்கையில்..?

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை நிச்சயம் உண்டு என்பது பழமொழி. அதை மெய்ப்பிக்கும் விதமாக மகிந்த குடும்பத்தினர்

2009-இல் விதைத்த வினையை அவர்கள் இன்று அறுவடை செய்கின்றனர். கொரோனா ஊரடங்கு மற்றும் அரசின் தவறான நிதிக் கொள்கையால் இலங்கையின் பொருளாதாரம் முடங்கியது. இதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். முதலில் அமைதியாக நடந்து வந்த இந்தப் போராட்டத்தை, ராஜபக்ச குடும்ப ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வன்முறை பாதைக்கு கொண்டு சென்றனர். இதுதான், தற்போது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச இழப்பதற்கு காரணமாக அமைந்தது.

மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் ஊரடங்கு, அவசர நிலை பிரகடனம் என முயற்சித்துப் பார்க்கும் அதிபர் கோட்டாபய, இறுதியில் ராணுவத்தை களமிறக்கியது. எதிர்காலத்தைத் தொலைத்து போராடுவோரை அடக்கும் ராணுவத்தின் முயற்சி வன்முறையில் முடிந்திருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் பலர் பதவி விலக, பிரதமராக தம்பியும் பக்கத்தில் இல்லாமல் அதிபர் கோட்டாபய தத்தளித்து வருகிறார்.

2009ஆம் ஆண்டு குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாக கொன்று தமிழர்களை கொன்று குவித்தபோது ஆட்சியில் இருந்தவர்கள் இதே ராஜபக்ச குடும்பத்தினர்தான். இப்போது அதற்கான எதிர்வினையைதான் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.