மலேசியப் பிரதமராக அந்நாட்டு முன்னாள் உள்துறை அமைச்சர் முஹையதீன் யாசின் பதவியேற்றுக் கொண்டார். ஆனால் இது சட்டவிரோதமானது என முன்னாள் பிரதமர் மஹாதிர் முகமது விமர்சித்துள்ளார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததால் மஹாதிர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை மீண்டும் பிரதமராக பதவியேற்க மன்னர் அழைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முஹையதீன் யாசீன் அழைக்கப்பட்டார்.
அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முஹையதீன் யாசீன் பாரம்பரிய மலேசிய உடை அணிந்து பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் மன்னரின் முடிவுக்கு மஹாதிர் முகமது தலைமையிலான கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்களுக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில் முஹையதீன் யாசீனை அழைத்தது சட்டவிரோதமானது எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.
விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தப்படும் என மஹாதிர் முகமது கூறியுள்ளார்.