உலகம்

அதிக நேர பணியால் பக்கவாதம் மற்றும் இதயநோய்கள் வரலாம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

அதிக நேர பணியால் பக்கவாதம் மற்றும் இதயநோய்கள் வரலாம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

webteam

அதிகமான நேரம் பணியில் ஈடுபடுதால் பக்கவாதம் மற்றும் இதயநோய்கள் பெருகி பலர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகநேரம் பணியில் ஈடுபடுவதால் வருடத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை இந்த கொரோனா ஊரடங்கில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் அதிகநேரம் பணியில் ஈடுபட்டதால் கடந்த 2016 ஆம் ஆண்டு இருதய மற்றும் பக்கவாத நோய்களால் பாதிக்கப்பட்ட 7,45,000 மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டில் இருந்து 30 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் ஆரோக்கிய துறையின் இயக்குநர் மரியா நீரா கூறும்போது, “ வாரத்தில் 55 மணி நேரத்திற்கு அதிகமாக பணி செய்வது கடுமையான ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்றார். மேலும் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி அதிகமாக பணி செய்வதால் உயிரிழந்ததில் 72 சதவீதம் பேர் நடுத்தர வயது மற்றும் அதற்கும் கீழானாவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் சீனா, ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. 194 நாடுகளில் உள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு 35 முதல் 40 மணி நேரம் உழைக்கும் மக்களோடு வாரத்திற்கு 55 மணி நேரம் உழைக்கும் மக்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, 55 மணி நேரம் உழைக்கும் மக்களுக்கு 35 சதவீதம் பக்கவாதம் வர வாய்ப்பிருப்பதாகவும் 17 சதவீதம் இருதய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் இந்த ஆய்வு 2000 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் அதிகமான நபர்கள் வீட்டிலிருந்து பணி செய்யும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அது சம்பந்தமாக தகவல் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பு 9 சதவீத மக்கள் அதிக மணி நேரம் உழைக்கிறார்கள் என்பதை தெரியப்படுத்தியுள்ளது.

தகவல் உதவி: https://www.reuters.com/