உலகம்

உக்ரைன் ராணுவ வீரரின் மார்பை துளைத்த கையெறி குண்டு - உயிரை பணயம் வைத்து அகற்றிய மருத்துவர்

JustinDurai

உக்ரைன் ராணுவ வீரரின் உடலுக்குள் வெடிக்கும் தருவாயில் இருந்த கையெறி குண்டை உயிரைப் பணயம் வைத்து வெற்றிகரமாக அகற்றியுள்ளார் மருத்துவர் ஒருவர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓராண்டை நெருங்கி வருகிறது. உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக போரிட்டு வரும் நிலையில் உக்ரைனும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ரஷியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேபோல் ரஷ்யாவும் தன் பக்கம் உள்ள நியாயத்தையும் நேட்டோ மீதான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது.

இந்த நிலையில், போரின்போது உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் உடலில் கையெறி குண்டு ஒன்று துளைத்துக்கொண்டு மார்பு பகுதியில் சிக்கியது. அது வெடிக்கும் தருவாயில் அவரது மார்பில் துளைத்திருந்த நிலையில் மிகவும் கவனத்துடன் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து  அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்த எக்ஸ்ரே படத்தையும் உக்ரைன் ராணுவம் வெளியிட்டிருந்தது. வீரரின் மார்பில் சிக்கியுள்ள அந்த கையெறி குண்டு எந்த நேரத்திலும் வெடித்துவிடும் அபாயம் இருந்ததால், ஒருவேளை அறுவை சிகிச்சையின்போது வெடித்துவிட்டால் என்ன ஆவது என்ற அச்சத்தில் மருத்துவர்கள் ஒதுங்கினர்.

அதேநேரத்தில் உடனடியாக அறுவை சிகிச்சையை தொடங்கி குண்டை அகற்றாமல் விட்டால், குண்டு வெடித்து, அந்த வீரர் உடல்சிதறி இறக்கும் அபாயம் நிலவியது. இதனால் சக ராணுவ வீரர்கள் கவலையடைந்தனர். இச்சூழலில் வின்னிட்சியாவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி வெர்பா, தைரியமாக அறுவை சிகிச்சை செய்து வீரரின் உடலிலிருந்து கையெறி குண்டை வெற்றிகரமாக அகற்றினார். '30எம்எம் VOG-30’ என்ற அந்த கையெறி குண்டை அருகிலிருந்த வீரர்கள் உடனடியாக செயலிழக்கச் செய்தனர். தாக்குதலுக்கு ஆளான ராணுவ வீரர் தொடர் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆபத்தான சூழலிலும் உயிரை பணயம் வைத்து ராணுவ வீரரை காப்பாற்றிய உக்ரைன் மருத்துவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தவற விடாதீர்: 'புதினுக்கு புற்றுநோய்; சீக்கிரமே இறந்துவிடுவார்' - உக்ரைன் உளவுத்துறை தலைவர் பகீர் தகவல்