அமெரிக்கா முகநூல்
உலகம்

அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா... நேரடி விவாதத்தில் ட்ரம்ப் vs கமலா ஹாரிஸ்!

அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்காவில், பரப்புரைகளும் விவாதங்களும் அனல் பறக்கின்றன. அந்நாட்டின் தேர்தல் மரபுப்படி, அதிபர் வேட்பாளர்கள்அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்காசெய்யும் நிகழ்ச்சி, சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

PT WEB

உலகின் மிகவும் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில், உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிபர் பதவிக்கு, வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது துணை அதிபராக இருக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களத்தில் உள்ளார்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களம் காண்கிறார். பரப்புரைக் களத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. கமலா ஹாரிஸ், அடிப்படையில் வழக்கறிஞர் என்பதால், தனது பரப்புரையில், ஒவ்வொரு வார்த்தையையும், தேர்ந்தெடுத்தே பேசுகிறார். அதே நேரத்தில் துப்பாக்கியில் இருந்து சீறிப் பாயும் தோட்டா போல சீறுகிறது, அவரது வார்த்தைகள். பரப்புரை மேடைகளில், ட்ரம்ப்பும் சோடை போகவில்லை.

எதைப் பற்றியும் யோசிக்காமல் எதிராளியை சாடுகிறார். விமர்சிக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் மரபுப்படி, போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி, மக்கள் முன் விவாதம் செய்வார்கள். இந்தத் தேர்தலின் முதல் பரப்புரை விவாதம், கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது, ஜோ பைடனும் டொனால்டு ட்ரம்ப்பும் விவாதித்தனர். அதன் பிறகு, பைடன் போட்டியிடுவதில் இருந்து விலகினார்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட பரப்புரை விவாதம், பென்சில்வேனியாவில் உள்ள ஃபிலடெல்பியா நகரில் உள்ள National Constitution Centre-ல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 10 ஆம் தேதி இரவு 9 மணிக்கு, இந்த விவாத மேடை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி கணக்கிட்டால், புதன்கிழமையன்று காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது என்று புரிந்து கொள்ளலாம். 90 நிமிடங்கள், அதாவது, ஒன்றரை மணி நேரம் நடைபெறும் இந்த விவாதத்தில், இந்த முறை, கமலா ஹாரிசும் - ட்ரம்ப்பும், முதல்முறையாக நேருக்கு நேர் விவாதிக்க உள்ளனர்.

ஏபிசி சேனலின் செய்தியாளர்களான டேவிட் முயர் - லின்சி டேவிஸ் ஆகியோர், இந்த பரப்புரை விவாதத்தை நெறிப்படுத்துவர். ஏபிசி சேனலிலும் ஏபிசி நியூஸ் லைவ், டிஸ்னி ப்ளஸ் ஆகியவற்றிலும் ஒளிபரப்பப்பட உள்ளது. ஒவ்வொரு பரப்புரையாளருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 2 நிமிடங்கள் நேர வரம்பு அளிக்கப்படும்.

எதிர் பரப்புரையாளரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து விவாதிக்க விரும்பினால், அதற்கும் 2 நிமிடங்கள் வழங்கப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் பேசும்போது, மற்ற வேட்பாளரின் மைக்ரோஃபோன் அணைத்து வைக்கப்படும். CNN-னின் இந்த விதியை தளர்த்துமாறும், மைக்ரோஃபோனை அணைக்க வேண்டாம் என்றும் கமலா ஹாரிஸ் விரும்பினார்.

பின்னர் மைக்ரோஃபோனை அணைக்கும் விதியை ஏற்றுக் கொண்டார். விவாத அறையில் பார்வையாளர்கள் இருக்க மாட்டார்கள். முன்தயாரிப்புடன் கொண்டுவரப்படும் எந்தக் குறிப்புகளுக்கும் பரப்புரை விவாதத்தில் அனுமதி இல்லை.

ஆனால், குறிப்பேடு மற்றும் பேனாவுடன் பங்கேற்கலாம். பரப்புரை விவாதத்தில் நிறைவுக் கருத்தை கூறுவது யார் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இதை தேர்வு செய்வதற்காக நாணயத்தை சுண்டி விட்டு டாஸ் போடப்படும். கடந்த முறை நடந்த பரப்புரை விவாதத்தில், டாஸ் வென்றது டொனால்டு ட்ரம்ப். அதேபோல, மேடையில் எந்தப் பகுதியில் அமர்ந்திருப்பது என்பதும் முக்கியம் பெறுகிறது.

இந்த வகையில் கமலா ஹாரிஸ் கடந்த முறை, மேடையில் பார்வையாளர்கள் பார்க்கும் போது வலதுபுறமாக இருக்கும் வகையில் அமர்ந்திருந்தார். பார்வையாளர்களின் கவனம், பொதுவாக வலது புறமாகவே இருக்கும் என்ற அடிப்படையில், கவனம் பெற்றவராக கமலா ஹாரிஸ் திகழ்ந்தார்.