ஹமாஸ் எக்ஸ் தளம்
உலகம்

வேகம் காட்டும் இஸ்ரேல்| அழிக்கப்படும் தலைவர்கள்.. அடுத்த தலைவர் யார்? பட்டியல் ரெடி செய்த ஹமாஸ்!

யாஹியா சின்வார் மரணத்திற்குப் பிறகு ஹமாஸின் அடுத்த தலைவராக யார் வரக்கூடும் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

Prakash J

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில்தான் இஸ்ரேல் அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் - காஸா இடையே ஓராண்டைக் கடந்து போர் நடைபெற்றுவரும் சூழலில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இந்த போரால் காஸாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. எனினும், ஹமாஸை அழிக்கும்வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்த நிலையில், தொடர்ந்து அங்கு போர் நடைபெற்று வருகிறது. அதன் விளைவாக ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர். சமீபத்தில்கூட, ஹமாஸ் அமைப்பின் மூளையாகச் செயல்பட்ட யாஹியா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

அடுத்தடுத்து ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதால் அவ்வமைப்புகளின் எதிர்காலம் என்ன ஆகும், போர் முடிவுக்கு வருமா என உலக அரசங்கில் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே யாஹியா சின்வார் மரணத்திற்குப் பிறகு ஹமாஸின் அடுத்த தலைவராக யார் வரக்கூடும் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

இதையும் படிக்க: ”சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை” - மகனுக்கு ஆதரவாக பேசிய தந்தை!

காலித் மஷால்

அந்த வகையில், ஹமாஸின் அடுத்த தலைவராக கத்தாரில் வசிக்கும் முன்னாள் ஹமாஸ் அரசியல் பணியகத் தலைவர் காலித் மஷால் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர். மேலும் இவர், பல தசாப்தங்களாக ஹமாஸின் முக்கிய தலைவராக இருந்துவருகிறார்.

லெபனான் நாட்டுச் செய்திச் சேனல் ஒன்று, ’கொல்லப்பட்ட சின்வாருக்குப் பதிலாக இன்னொருவர் நியமிக்கப்படும் வரை ஹமாஸின் செயல் தலைவராக மஷால் இருப்பார்’ என அதெரிவித்துள்ளது. ஆனால், இவர் வெளியுலகுக்கு அதிகம் தெரிந்தவராகவும் வெளிநாட்டில் உள்ளதாலும் யுத்த களத்தில் இவர் செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காலித் மஷால்

முஹம்மது சின்வார்

காலித் மஷாலைத் தவிர, இஸ்ரேலால் சமீபத்தில் கொல்லப்பட்ட சின்வாரின் இளைய சகோதரர் முஹம்மது சின்வார் பெயரும் அடிபடுகிறது. இவர் ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவில் மூத்த தளபதியாக உள்ளார். இவரும், இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக அந்த நாட்டால் தேடப்பட்டு வருகிறார். மேலும், பல தசாப்தங்களாக ஹமாஸ் அமைப்பில் செயல்பட்டு வருகிறார். அவர், 1990களில் இஸ்ரேலால் 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் மற்றும் ரமல்லாவில் உள்ள பாலஸ்தீனிய அதிகாரச் சிறையில் கூடுதலாக மூன்று ஆண்டுகள் கழித்தார். அதிலிருந்து அவர் 2000-ல் தப்பினார். முஹம்மது சின்வாரை இஸ்ரேல் ஐந்து முறை படுகொலை செய்ய முயற்சித்துள்ளது. ஆனால் அது முடியவில்லை. தற்போதும் மற்ற ஹமாஸ் தளபதிகளைவிட, காஸா பகுதியில் அவரைத்தான் இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக தேடிவருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு குறியா? பிரதமர் இல்லத்தின் மீது பறந்த ட்ரோன்.. ஹிஸ்புல்லா தாக்குதல்!

பிற தலைவர்கள்

இவர்கள் இருவரைத் தவிர, மேலும் சிலரின் பெயர்களையும் ஹமாஸ் பரிசீலனையில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஹமாஸ் இராணுவப் பிரிவின் மூத்த தளபதியான ஹடாத் மற்றும் ரஃபா பிரிகேட் கமாண்டரான முஹம்மது ஷபானா.

இவர், சமீபத்தில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது, இருப்பினும் அவரது மரணம் உறுதி செய்யப்படவில்லை. இவரைத் தவிர்த்து அந்தப் பட்டியலில் இருக்கும் இன்னொரு பெயர், ஹமாஸ் பொலிட் பீரோவின் மூத்த அதிகாரி கலீல் அல்-ஹய்யா. அவர் கத்தாரில் இருக்கிறார்.

மேலும், மூத்த ஹமாஸ் அரசியல் அதிகாரி மௌசா அபு மர்சூக், ஹமாஸ் ஷூரா கவுன்சிலின் தலைவர் முஹம்மது இஸ்மாயில் தர்விஷ் ஆகியோரின் பெயர்களும் அந்தப் பட்டியலில் உள்ளது.

முஹம்மது சின்வார் (வலதுபுறம்)

இவர்களில், யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஹமாஸ் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதேநேரத்தில், ”தலைவர்களைக் கொல்வதால் தங்கள் அமைப்பை அழிக்க முடியாது என்றும் போர் முடிவுக்கு வரும்வரை இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்” என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. எனவே ஹமாஸின் அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்கப்போகிறார் என்பதை அனைத்து நாடுகளும் கூர்ந்து கவனித்துவருகின்றன. தவிர, இதைவிட இருதரப்பிலும் மேலும் தாக்குதல் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஒரேநாளில் 11.. ஒரு வாரத்தில் 50.. தொடரும் வெடிகுண்டு மிரட்டல்களால் பாதிக்கப்படும் விமானங்கள்!