உலகம்

“189 பேரும் உயிரிழந்திருக்கலாம்” - தேடுதல் குழு தகவல்

“189 பேரும் உயிரிழந்திருக்கலாம்” - தேடுதல் குழு தகவல்

rajakannan

இந்தோனேஷியாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 189 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று தேடுதல் குழு தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமானநிலையத்தில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு அந்நாட்டு நேரப்படி காலை 6.20 மணிக்கு லயன் ஏர் போயிங் விமானம் 189 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

முதலில் விமானம் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் பாகங்களை கடலில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள்‌ மிதப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன‌. பயணிகள் பயன்படுத்திய சில பொருட்களை தேடுதல் குழுவினர் மீட்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. இதனால், விமானத்தில் பயணித்த 189 பேரின் நிலை என்னவானது என்ற அச்சம் எழுந்தது. 

இதனிடையே , அருகில் உள்ள‌ விமானநிலையத்தில் விமானத்தை தரையிறக்க வேண்டுமென விமானி கேட்டிருந்ததாகவும், அதன் பின்னரே தொடர்பு துண்டிக்கப்பட்டு‌ விமானம் கடலில் விழுந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 189 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று தேடுதல் குழு தெரிவித்துள்ளது. லயன் ஏர் விமானம் கடலில் விழுந்த போது 189 பேர் விமானத்தினுள் இருந்துள்ளனர். இவர்களில் 179 பேர் பயணிகள், 10 பேர் விமான பணியாளர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

விமானத்தில் பயணித்தவர்களின் உடைமைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், விமான கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது கிடைத்தவுடன் விபத்து தொடர்பான முழு விவரங்கள் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே விமானம் கடலில் விழுந்ததை படகில் சென்றவர்கள் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.