எண்டோரோபாக்டர் புகாண்டென்சிஸ் நாசா
உலகம்

விண்வெளி நிலையத்தில் உருவான ‘உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பாக்டீரியா' பற்றிய முழு விவரம்!

Jayashree A

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 3ஆவது முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ளார். ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தில், நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) கடந்த வாரம் அவர் அடைந்திருந்தார்.

விண்வெளி நிலையத்தில் ஏற்கெனவே 7 பேர் நீண்டநாட்களாக தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து பணிபுரிவதற்காக சுனிதா வில்லியஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த வாரம் சென்றனர்.

சுனிதா வில்லியம்ஸ்

இப்படியாக மொத்தம் 9 பேர் அங்கிருந்து ஆய்வுசெய்து வருவதால், பல சுவாரஸ்ய ஆய்வு முடிவுகளுக்காக மக்களும் விஞ்ஞானிகளும் காத்திருந்தனர். ஆனால் விண்வெளி நிலையத்தைப் பற்றி யாருமே எதிர்பார்க்காத ஒரு செய்தியை தற்பொழுது நாசா வெளியிட்டுள்ளது.

அதன்படி, விண்வெளி நிலையத்தில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு வித பாக்டீரியா மரபணு மாற்றத்தின் மூலம் அபரிமிதமாக வளர்ச்சியடைந்து, ஆபத்தை விளைவிக்கக்கூடிய பாக்டீரியாவாக உருமாறி உள்ளது தெரிய வந்துள்ளது. இதை ஆய்வாளர்கள் சூப்பர்பக் என்று அழைக்கின்றனர்.

சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட Enterobacter bugandensis பாக்டீரியா

இந்த வகை பாக்டீரியா Enterobacter bugandensi (எண்டோரோபாக்டர் புகாண்டென்சிஸ்), மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடிய மிக ஆபத்தான பாக்டீரியா என்றும், இந்த வகை பாக்டீரியா பூமியில் பரவினால் இதற்கான சிகிச்சை இருக்குமா என கணிக்க முடியாது என்றும் கூறுகின்றனர்.

இந்த வகை பாக்டீடியாவைப் பற்றிய ஆய்வை, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பசடேனாவில் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் மருத்துவரான கஸ்தூரி வெங்கடேஸ்வரன் தலைமையில் ஒரு குழு மேற்கொள்ள இருக்கிறது.

பூமியிலிருந்து விண்வெளி நிலையத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களின் மூலமாக இந்த வகை பாக்டீரியா அங்கு தங்கியிருக்கலாம் என்றும், மரபணு மாற்றத்தின் உதவியால் அபரிமித வளர்ச்சி அடைந்து இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.