தாக்குதலுக்கு உள்ளான லெபனான் பகுதி pt web
உலகம்

'குண்டுமழை பொழியும் ஏவுகணைகள்'- லெபனான் சிரியா எல்லைத் துண்டிப்பு.. இஸ்ரேல் நடத்தும் கோரத் தாக்குதல்

எப்போது குண்டுமழை பொழியும் ஏவுகணைகள் எந்த திசையில் இருந்து பாயும் என்று தெரியாத அச்சம் வியாபித்திருக்கிறது. ஏவுகணைகள் துளைத்த கட்டடங்கள் உருக்குலைந்து காட்சியளிக்கின்றன.

PT WEB

லெபனானின் தலைநகர் பெய்ரூட் தெற்குப்பகுதிகளில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் லெபனானுக்கும், சிரியாவுக்கும் இடையேயான எல்லையையும் இஸ்ரேல் துண்டித்துள்ளது.

எப்போது குண்டுமழை பொழியும் ஏவுகணைகள் எந்த திசையில் இருந்து பாயும் என்று தெரியாத அச்சம் வியாபித்திருக்கிறது. ஏவுகணைகள் துளைத்த கட்டடங்கள் உருக்குலைந்து காட்சியளிக்கின்றன. பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் காட்சிகள் இவை..

தப்பிப்பிழைத்து வாழ்தல் ஒன்றே முக்கியம் என மூட்டை முடிச்சுகளுடன் மக்கள் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தெற்கு லெபனானை தாக்கப்போவதாக இஸ்ரேல் எச்சரித்த நிலையில், ஐநா அறிவித்த பாதுகாப்பு பிராந்தியத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் இரவு வானை பிளந்துகொண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெய்ரூட் அதிர்ந்து கொண்டிருக்கிறது. வியாழக்கிழமை இரவில் 10 முறை தொடர் வான்வழித்தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாக லெபனான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹெஸ்புல்லா ஆயுதக்குழுவினர், சிரியா வழியாக ஈரானிடம் இருந்து ஆயுதங்களை பெறுவதாக கூறும் இஸ்ரேல், லெபனானுக்கும், சிரியாவுக்கும் இடையேயான முக்கிய சாலையான Masnaa Border Crossing ஐ 2 ஏவுகணைகளை வீசித் தகர்த்துள்ளது. மேலும், ஹெஸ்புல்லாவின் 200 நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அஞ்சி, கடந்த செப்டம்பர் 23 ஆம்தேதி முதல் 30 ஆம்தேதி வரை, 2 லட்சத்து 57 ஆயிரம் சிரியா நாட்டு மக்களும், 82 ஆயிரத்திற்கும் அதிக லெபனான் நாட்டு மக்களும், சிரியா நாட்டுக்கு சென்றுள்ளதாக லெபனான் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 23 ஆம்தேதி முதல் தற்போதுவரை லெபனானில் 2 ஆயிரம் பேர் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரான் தலைவர் கமேனியின் உரையையடுத்து, இஸ்ரேலின் வடபகுதிகளில் ஹெஸ்புல்லாவும் ராக்கெட்டுகளை வீசியது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் பதற்றத்தின் பிடியிலேயே இருக்கிறது.