பேஜர் வெடிப்பு எக்ஸ் தளம்
உலகம்

ஹிஸ்புல்லாவுக்கு பேஜர்கள் சப்ளை.. விசாரணையில் கேரள நபர் மற்றும் இத்தாலி பெண்!

லெபனானில் பேஜர்கள் வெடித்துச் சிதறிய வழக்கு தொடர்பாக கேரள நபர் மற்றும் இத்தாலி பெண் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Prakash J

லெபனானில் இயங்கிவரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர்கள் ஒரேநேரத்தில் வெடித்துச் சிதறின. இதற்கு அடுத்த நாள் அவர்கள் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகளும் வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகவும், 2800 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

பேஜர்களை தைவானை அடிப்படையாக கொண்ட நிறுவனம் தயாரித்ததாகவும், அந்த பேஜர்களை மாற்றம் செய்து அதில் 3 கிராம் வெடிப்பொருட்களை இஸ்ரேலைச் சேர்ந்த மொசட் இணைத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், லெபனானில் பேஜர்கள் வெடித்த சம்பவத்தில் கேரள தொழிலதிபருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதுடன், அதுகுறித்த விசாரணையும் முடக்கிவிடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடியைச் சேர்ந்த ரின்சன் ஜோஸ் என்பவருக்குச் சொந்தமான நோர்டா குளோபல் லிமிடெட் நிறுவனம்தான் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினருக்கு பேஜர்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

ஜோஸின் இந்த நிறுவனம், தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உதிரிப் பாகங்களைக் கொண்டு பேஜர்களை தயாரித்து வழங்கியுள்ளது. இவரது நிறுவனம் கொடுத்த பேஜர்கள்தான் வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதையும் படிக்க: ”இங்க ஆள் இல்ல பாருங்க..”|வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்த ரிஷப்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பேஜர்கள் வெடித்த விவகாரத்தில் சர்வதேச பாதுகாப்பு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், ஜோஸின் நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நோர்டா குளோபல் நிறுவனம் அல்லது அதன் உரிமையாளர் ஜோஸ், இதுவரை எவ்விதமான சட்டவிரோத பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டதில்லை என்று பல்கேரியா அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், ஜோஸ் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. மேலும், வயநாட்டில் ஜோஸ் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம், இந்த சாதனங்கள் ஹங்கேரியை தளமாகக் கொண்ட BAC கன்சல்டிங் KFT (பிரைவேட் லிமிடெட்) மூலம் தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அந்த நிறுவனம் AR-924 பேஜர்களை அப்பல்லோ என்ற பிராண்ட் பெயரில் விற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு 49 வயதான இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்டியானா பார்சோனி-ஆர்சிடியாகோனோ தலைமை தாங்குகிறார். என்றாலும், இந்த விபத்தை, தமது நிறுவனம் உருவாக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ‘திருப்பதி லட்டு’ தயாரிப்பில் இவ்வளவு சுவாரஸ்ய தகவல்கள் இருக்கா? | 300 ஆண்டு வரலாறும்.. பின்னணியும்!