உலகம்

லெபனான் வெடிவிபத்து: உண்மையில் நடந்தது என்ன? சூடுபிடிக்கும் விசாரணை!!

லெபனான் வெடிவிபத்து: உண்மையில் நடந்தது என்ன? சூடுபிடிக்கும் விசாரணை!!

webteam

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் இதயப் பகுதியான துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. நான்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிவிபத்துக்குப் பிறகு பெய்ரூட் நகரமே போர்க்களம்போல காட்சியளிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வெடிவிபத்து தொடர்பாக பெய்ரூட் துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை பாதுகாத்து வைத்து கையாண்டவர்கள் யார் என்பதைக் கண்டறியும் வரை அதிகாரிகள் அனைவரும் வீட்டுக்காவலில் இருப்பார்கள் என்று லெபனான் அமைச்சர் அப்தெல் சமது தெரிவித்தார். லெபனான் துறைமுகத்தில் சுமார் 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த பிறகு பெய்ரூட் நகருக்கு வருகைதந்த முதல் வெளிநாட்டுத் தலைவராக பிரெஞ்சு குடியரசுத் தலைவர் எம்மானுவேல் மெக்ரோன் சென்றுள்ளார். பேரிடர் மீட்புக்குழுவினரும் அவருடன் வந்துள்ளனர். வெடிவிபத்து காரணமாக பல நூறு பேர் காணாமல் போயிருப்பதாகவும், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெபனான் பிரதமர் ஹசான் தியாப், விபத்தில் உயிரிழந்த மக்களுக்காக வியாழன் முதல் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், இங்கு பல ஆணடுகளாக தொடரும் நிதி நெருக்கடிகளால் மக்கள் வேலையிழந்துவருகின்றனர். அதற்கு அரசியல்வாதிகளின் ஊழலும் திறனற்ற நிர்வாகமே காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.