லாஸ்வேகாஸ் துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்த தமிழரான குமார், புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அமெரிக்காவின் மிக முக்கியமான கேளிக்கை நகரமாகவும், சுற்றுலாத் தலமாக விளங்குவது லாஸ்வேகாஸ். அப்பகுதியில் இசை நிகழ்ச்சிக்காக ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். கொண்டாட்டங்கள் நிறைந்திருந்த நேரத்தில், அங்குள்ள விடுதியின் 32வது தளத்தில் இருந்து ஆயுதமேந்திய நபர் ஒருவர், மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இந்த சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த தமிழரான குமார் கூறுகையில், “லாஸ்வேகாஸ் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை காண பல்வேறு மாகாணங்களில் இருந்து சுமார் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர். அப்போது இந்த துப்பாக்கிச்சூடு நடைப்பெற்றது. தாக்குதல் நடத்தியவர் தங்கியிருந்த விடுதியின் 32வது தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக பார்த்தால் இசை நிகழச்சி நடைபெற்ற இடத்தை தெளிவாக பார்க்கலாம். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யாரையும் குறிவைத்து சூடவில்லை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டு மக்கள் அச்சத்தில் பதறி ஓடினர். தொடர்ந்து துப்பாக்கி சூடும் சத்தம் பயங்கரமாக கேட்டது. இத்தாக்குதலை நடத்தியவர் அதிநவீன துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் அந்த தோட்டாக்கள் அதிக தூரத்தை மிக விரைவாக சென்று தாக்கக்கூடியது என பேசப்படுகிறது” என்று கூறினார்.