அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் துப்பாக்கிச் சூடு நடத்தி 58 உயிர்களை கொன்ற கொலையாளி ஸ்டீஃபன் பட்டாக் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் உள்புறத்திலும், வெளிபுறத்திலும் கேமிராக்களை பொருந்தியிருந்ததாக காவல்துறையினர் தற்போது தெரிவித்துள்ளனர்.
லாஸ் வேகாஸில் உள்ள மண்டாலே பே ஹோட்டலின் 32-வது மாடியில் இருந்தபடி, இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர்கள் மீது ஸ்டீஃபன் பட்டாக் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 58 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்துக்கான பின்னணி குறித்து அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காவல்துறையினரின் வருகையை கண்காணிப்பதற்காக ஸ்டீஃபன் பட்டாக் அந்த ஹோட்டல் அறையின் வெளிபுறத்தில் இரண்டு கேமராக்களை பொருத்தி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதன் மூலம் திட்டமிட்ட ரீதியில் அவர் இந்த படுகொலை சம்பவத்தை நிகழ்த்தி இருப்பது உறுதியாகியுள்ளது. பட்டாக் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்காததால், கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.