உலகம்

ஊழியர்களின் விடா முயற்சி... அமேசான் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பு

Sinekadhara

அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவரின் தொடர் முயற்சியால் முதன்முறையாக தொழிற்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நியூயார்க்கிலுள்ள அமேசான் நிறுவன குடோனில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திடீரென பணிநீக்கம், போதிய சம்பளம் வழங்காதது உள்ளிட்ட புகார்களை அமேசானுக்கு எதிராக கூறிவந்த ஊழியர்கள், தொழிற்சங்கம் அமைக்க முயற்சி செய்தனர். இதனைத் தடுக்க அந்நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான தேர்தலில் அமேசான் ஊழியர்கள் வெற்றி பெற்றனர்.

உலகின் முன்னணி நிறுவனமாகவும் அமெரிக்காவின் 2ஆவது பெரிய நிறுவனமுமான அமேசானில் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டிருப்பது தொழிலாளர் உரிமைக்கான போராட்டத்தில் முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது.

உலகம் முழுவதுமுள்ள அமேசான் நிறுவன கிளைகளில் தொழிற்சங்கம் அமைய இது வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. தொழிற்சங்கம் அமைக்கும் முடிவு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், பணியாளர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதையே விரும்புவதாகக் கூறியுள்ளது.