கொச்சி வந்தடைந்தது விமானம் pt web
உலகம்

குவைத் தீ விபத்து; கொச்சி வந்ததடைந்தது உயிரிழந்த 31 பேரின் உடல்கள்! கேரள அமைச்சர் சொன்ன புகார்!

குவைத்தில் இருந்து 31 பேரின் உடல்களுடன் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது தனி விமானம்..

PT WEB

குவைத்தில் Mangaf நகரில் 196 பேர் வசித்து வந்த 7 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தோரில் 48 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 45 பேர் இந்தியர்கள் என்றும், 3 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் தீ விபத்து.. வரைகலை விளக்கம்

விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், மாரியப்பன் வீராசாமி, சிவசங்கர், முகமது ஷெரீப், சின்னதுரை, ராஜு எபமேசன், கருப்பணன் ராமு உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக கேரளாவைச் சேர்ந்த 23 பேர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூவரும், ஒடிசாவைச் சேர்ந்த இருவரும் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தனர். பீகார், பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்தும் தலா ஒருவர் உயிரிழந்திருப்பதாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருவதற்காக, இந்திய விமானப்படைக்கு சொந்தமான C-130J சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் குவைத் விரைந்தது. இதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் கொச்சிக்கு 7 தமிழர்கள் உட்பட 31 பேரின் உடல்கள் இன்று எடுத்து வரப்பட்டன. இதில் கேரளாவைச் சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரது உடலும் கொண்டு வரப்பட்டது.

இந்தியா வந்தடைந்துள்ள தமிழர்களின் உடல்களை, உடனடியாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கேரள அரசு தரப்பில் மத்திய அரசு மீது புகார் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதாவது, தீ விபத்தை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குவைத் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் புகார் தெரிவித்துள்ளார்.