உலகம்

இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் நினைவாக கல்லறையை கட்டிய கொரிய பொறியாளர்!

இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் நினைவாக கல்லறையை கட்டிய கொரிய பொறியாளர்!

ச. முத்துகிருஷ்ணன்

ஜூன் 15 அன்று இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தனது சேவையை நிறுத்தியதை அடுத்து, கொரிய பொறியாளர் ஒருவர் அதன் நினைவாக கல்லறை ஒன்றை கட்டியுள்ளார்.

மைக்ரோசாஃப்டின் முக்கிய மென்பொருளான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (INTERNET EXPLORER) கடந்த ஜூன் 15-ஆம் தேதியுடன் தனது சேவையை நிறுத்தியது. 1995-ஆம் ஆண்டு இறுதியில் இந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் துவங்கப்பட்டது. இணையத்தை பயன்படுத்தத் தொடங்கியவர்கள் இதன் சேவையை பயன்படுத்தாமல் இருந்திருக்க முடியாது என்றே சொல்லாம்.

ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குப் பிறகு, மைக்ரோசாப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இணைய உலகில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றது. மைக்ரோசாப்ட் அதன் பயனர்களை வேகமான மற்றும் பாதுகாப்பான இணையத்திற்கு மைக்ரோசாஃப்ட் எட்ஜைத் தேர்வுசெய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. எக்ஸ்புளோரரின் மறைவால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பயனர், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் சேவையை நினைவுகூரும் வகையில் ஒரு கல்லறையை உருவாக்க முடிவு செய்தார்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்குப் பொருத்தமான அஞ்சலி செலுத்தும் வகையில், தென் கொரியாவைச் சேர்ந்த பொறியாளர், ஜங் கி-யங் ஒரு கல்லறைக்காக சுமார் $300 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 25,000) செலவிட்டார். கல்லறையில் ஒரு வாசகத்தையும் அவர் நிறுவினார். அதில் "மற்ற பிரவுசர்கள் பதிவிறக்க இண்டர்நெட் இக்ஸ்புளோரர் ஒரு நல்ல கருவியாக இருந்தது" என்று எழுதப்பட்டிருந்தது.

எக்ஸ்ப்ளோரரைப் பற்றிப் பேசுகையில், இப்போது செயலிழந்த மைக்ரோசாஃப்ட் எக்ஸ்ப்ளோரரைப் பற்றி தனக்கு கலவையான உணர்வுகள் இருப்பதாக ஜங் கூறினார். “இது ஒரு வலி, ஆனால் நான் அதை காதல்-வெறுப்பு உறவு என்று அழைப்பேன், ஏனெனில் எக்ஸ்ப்ளோரர் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. கல்லறையைக் கொண்டு மக்களை சிரிக்க வைக்க விரும்பினேன். ஆனால் படம் எப்படி வைரலானது என்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்” என்று கூறினார்.