உலகம்

“பாகிஸ்தானை அம்பலப்படுத்தும் கடமை எங்களுக்கு இருக்கிறது”-ஐ.நாவில் இந்திய பிரதிநிதி காட்டம்

“பாகிஸ்தானை அம்பலப்படுத்தும் கடமை எங்களுக்கு இருக்கிறது”-ஐ.நாவில் இந்திய பிரதிநிதி காட்டம்

நிவேதா ஜெகராஜா

பாகிஸ்தான் அரசு ஒருபுறம் பயங்கரவாதிகளை தூண்டிவிட்டுவிட்டு, மறுபுறம் அமைதிக்காக பாடுபடுவது போல் நடிப்பதாக இந்தியா சாடியுள்ளது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய நிலையில் இந்தியா அதற்கு இந்த பதிலடியை கொடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தங்கள் நாடு இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை விரும்புவதாக தெரிவித்தார். அதே நேரம் காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண்பது மூலமே தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலவச்செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். இம்ரானின் இப்பேச்சுக்கு ஐநாவுக்கான இந்திய பிரதிநிதியும் செயலாளருமான ஸ்னேகா துபே உடனடியாக பதிலடி கொடுத்தார். அப்போது அவர், “ஒரு கட்டிடத்திற்கு தீ வைத்து விட்டு, அத்தீயை அணைக்க முற்படுவது போல பாகிஸ்தானின் செயல் உள்ளது” என்றார்.

மேலும் பேசுகையில், “பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வளர்த்து விட்டுக்கொண்டுள்ளது. இதனால் உலகமே ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. உலக அரங்கில் பொய்யை பரப்பும் பாகிஸ்தானை அம்பலப்படுத்தும் கடமை எங்களுக்கு இருக்கிறது. காஷ்மீரும் லடாக்கும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்தான். உலகையே அதிரவைத்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் தந்தது பாகிஸ்தான்தான். அதை எந்த ஒரு நாடும் எப்போதும் மறக்காது.

பின்லேடன் போன்றொரு நபரை, பாகிஸ்தான் தியாகி போல் இப்போதுவரை சித்தரிக்கிறது. பாகிஸ்தான் அமைதியை மீட்பதற்கு நினைத்தால், அதற்கு முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டியது பாகிஸ்தானின் கடமைதான்” என்றார் ஸ்னேகா துபே.