ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதம் தாங்கி போர் புரிய போவதாக உக்ரைனைச் சேர்ந்த பிரபல உலக குத்துச்சண்டை சாம்பியன் சகோதரர்கள் அறிவித்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்தின் மேயராக இருப்பவர் வைட்டாலி கிளிச்க்கோ (50). இவரது சகோதரர் விளாடிமிர் கிளிச்க்கோ (45). இவர்கள் இருவரும் முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன்கள் ஆவர். தற்போது இருவரும் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வுபெற்று விட்டனர். இதனிடையே, உக்ரைனை சுற்றி வளைத்து ரஷ்யா தாக்குதல் தொடுத்து வருவதால் அந்நாட்டில் உள்ள குடிமக்கள், ராணுவத்துக்கு உதவிபுரிய வருமாறு உக்ரைன் அதிபர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், அதிபரின் அழைப்பை ஏற்று, முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன்களான வைட்டாலி கிளச்க்கோவும், விளாடிமிர் கிளிச்க்கோவும் ஆயுதம் ஏந்தி போர் புரிய போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர்கள் அளித்த பேட்டியில், "குத்துச்சண்டை வளையத்துக்குள் இதுவரை உக்ரைனின் பெருமைக்காக சண்டையிட்டோம். இப்போது எங்கள் தாய்நாட்டை காக்க போர்க்களத்துக்கு செல்ல இருக்கிறோம். எங்கள் உயிர் இருக்கும் வரை உக்ரைனை ரஷ்யாவை கைப்பற்ற விட மாட்டோம்" என்றனர்.