உலகம்

“வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நலமுடன் இருக்கிறார்” - தெளிவுபடுத்திய தென்கொரியா 

webteam
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என தென்கொரியா தெரிவித்துள்ளது.
 
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சைக்குச் செய்து கொண்டதாகவும், அதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கடந்த வாரம் செய்தி வெளியாகியது. அந்தச் செய்தியில் புகைபிடித்தல், உடல் பருமன், அதிக வேலைப்பளு காரணமாக இதய நோயால் கிம் ஜாங் உன் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது. வடகொரியா தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
  
வட கொரிய விவகாரங்களைக் கவனிக்கும் அதிகாரிகளின் தகவலைக் குறிப்பிட்டு சிஎன்என் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது. இதனிடையே கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலைத் தென் கொரியா மறுத்தது. அது போல எந்த விஷயமும் வடகொரியாவில் தென்படவில்லை என தென்கொரியா கூறியது. 
 
இதனிடையே இரண்டு நாட்கள் முன்பு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு இந்த மாத தொடக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் அவரது உடல்நிலை குறித்து அறிய வட கொரியாவுக்கு சீனா மருத்துவ நிபுணர்களையும் அனுப்பியதாகக் கூறப்பட்டது. 
 
 
இந்நிலையில் கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என தென்கொரிய அதிபர் மூன் ஜேயின் தேசிய பாதுகாப்பு சிறப்பு ஆலோசகரான மூன் சுங் இன் தெரிவித்தார். கடந்த 13 ஆம் தேதியிலிருந்து வடகொரியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள வான்சன் நகரில் கிம் தங்கியிருப்பதாகவும், அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான அசைவுகள் எதுவும் தென்படவில்லை என்றும் மூன் சுங் இன் தெரிவித்துள்ளார்.