உலகம்

''கிம் கெஞ்சியதால் ட்ரம்ப் சம்மதித்தார்''- ட்ரம்பின் வழக்கறிஞர்

''கிம் கெஞ்சியதால் ட்ரம்ப் சம்மதித்தார்''- ட்ரம்பின் வழக்கறிஞர்

webteam

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கெஞ்சி கேட்டதால்தான் ரத்து செய்த சந்திப்புக்கு ட்ரம்ப் மீண்டும் சம்மதித்தார் என ட்ரம்பின் வழக்கறிஞர் ரூடி கிலியானி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார். இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா இடையே சமாதானம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து, ட்ரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார். 

பின்னர், திட்டமிட்டபடி வடகொரிய அதிபருடனான சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ட்ரம்ப்பின் தலைமை வழக்கறிஞரும், நியூயார்க் நகர முன்னாள் மேயருமான ரூடி கிலியானி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கெஞ்சி கேட்டதால்தான் அவரை சந்திக்க ட்ரம்ப் மீண்டும் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில், கிலியானியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.