கனடா நாட்டின் டொரோண்டோ மாகாணத்தில் உள்ள ஒட்டாரியோ பகுதியில், சீக்கிய மற்றும் குருத்வாரா கவுன்சில், பாரம்பரிய கல்சா தின விழாவுக்கு ஏற்பாடு செய்தது. அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோவை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்த சீக்கியர்கள், அவருக்கும் தலைப்பாகை அணிவித்தனர்.
இதை தொடர்ந்து, அவர் தலைப்பாகையுடன் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “சீக்கிய மக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பத்தில் கனடா உறுதியாக இருக்கிறது" என்று தெரிவித்தார். இதன்போது, அங்கு திரண்டிருந்த பிரிவினைவாதிகள், காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பினர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை, அந்நாட்டு துணைத் தூதரை நேரில் அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது.
அதில், “ட்ரூடோ பேசிய கூட்டத்தில் காலிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்பட்டது கவலையளிக்கிறது. பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு, கனடா மீண்டும் இடமளித்துள்ளதை இது காட்டுகிறது. இந்த நடவடிக்கை இந்தியா - கனடா உறவில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, கனடா மக்களுக்கு பாதகமாக அந்நாட்டில் வன்முறையையும் குற்றத்தையும் ஊக்குவிக்கும் விதமாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜாரின் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ கடந்த செப்டம்பர் மாதம் பேசியதைத் தொடர்ந்து இருநாடு உறவுகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.