இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) பிரபல தொழிலதிபருமான கவுதம் அதானி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த லஞ்சம் 2020 முதல் 2024 வரை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முறைகேடாகப் பெறப்பட்டதாக கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அதானி குழுமத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரிய சக்தி திட்டத்திற்காக அதானி குழுமம் பில்லியன்களை திரட்டிய அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து இந்த உண்மை மறைக்கப்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவுதம் அதானி தவிர அவர் உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதற்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அது தனது அறிக்கையில், “இது அடிப்படை ஆதாரமற்றது; இதுதொடர்பாக தாங்களும் சட்ட நடவடிக்கை எடுப்போம்” என அது தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவர் குழுமத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதன் காரணமாக, ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை அதானி குழும நிறுவனங்கள் இழந்ததாகக் கூறப்படுகிறது. மறுபுறம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, மீண்டும் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துள்ளார். இதனால், இந்த விவகாரம் இந்திய அரசியலில் மீண்டும் பூதாகரமாகியுள்ளது.
இந்த நிலையில், அதானி குழுமத்துடனான எரிசக்தி துறை ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடியாக அறிவித்துள்ளார். கென்யாவின் பிரதான விமான நிலையத்தை பராமரிக்கும் ஒப்பந்தம் மற்றும் 30 ஆண்டு காலத்துக்கு கென்ய எரிசக்தி துறையை நிர்வகிக்கும் வகையிலான 736 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்துசெய்துள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த மாதம்தான் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த ஒப்பந்தத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அண்மையில் கென்யா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதானி குழுமத்துடனான இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்த அந்நாட்டு நிறுவனத்திற்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிபர் ரூட்டோ நிகழ்த்திய தேசிய உரையில், ”விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக அதானி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டு உள்ளேன். மேலும், மின்சார விநியோகம் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.