keir starmer pt web
உலகம்

பொறுப்பேற்று சந்தித்த முதல் தேர்தலிலேயே ஆட்சியில் அமர்ந்த சூத்திரதாரி... யார் இந்த ஸ்டார்மர்?

PT WEB

புதிய தலைமுறைக்காக ரவிக்குமார்

14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியில்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தொழிலாளர் கட்சி, இப்போது அரியணையை வசப்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள், தொழிலாளர் கட்சியின் வெற்றியைப் பறைசாற்றியதும் உரையாற்றிய கெய்ர் ஸ்டார்மர், தேசத்தை மறுகட்டமைப்பதற்கான அடுத்த அத்தியாயம் இன்று தொடங்குகிறது என முழங்கினார்.

மொத்தம் உள்ள 650 இடங்களில் 410க்கும் அதிகமான இடங்களில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது தொழிலாளர் கட்சி. ஆட்சியமைக்கத் தேவையான, மேஜிக் நம்பரான 326-ஐ அநாயசமாக கடந்து பெரும்பான்மை பெற்றுள்ளது. 2019-ல் நடந்த தேர்தலில் 364 இடங்களை வென்றிருந்த கன்சர்வேட்டிவ் கட்சி, இப்போது நூற்றுக்கும் அதிகமான இடங்களையே பெற்றுள்ளது.

2010-ஆம் ஆண்டிலிருந்து ஆட்சி அதிகாரத்தில் இல்லாத தொழிலாளர் கட்சி, இப்போது மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த அரசியல் மாற்றத்தை நிகழ்த்தியவர் தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர்.

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்

அடிப்படையில் இவர் வழக்கறிஞர்... சர்ரே என்ற இடத்தில் பிறந்தவர். தந்தை, தொழிற்சாலைகளுக்கான சாதனங்களை பழுதுநீக்கும் தொழிலாளி. தொழிலாளர் சங்கங்களிலும், தொழிலாளர் கட்சியிலும் செயலாற்றியவர். கெய்ரின் தாயார், செவிலியாக இருந்தவர். கெய்ர் தொடக்கக் கல்வி பயின்ற அரசுப்பள்ளி, ஒருகட்டத்தில் தனியார் வசம் போய்விட, உள்ளூர் நிர்வாகம்தான் அவருக்கு கல்விக் கட்டணம் செலுத்தியது.

லீட்ஸ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு பயின்றார் கெய்ர். மனித உரிமைச் சட்டங்களில் நிபுணரானார். தனது வாதத் திறமையை, மனித உரிமை மீறல்களுக்கு எதிரான வழக்குகளில், பிரிட்டன் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திறம்பட செயல்பட்டவர்.கரீபியன், ஆப்பிரிக்கா பிராந்தியங்களில், மரண தண்டனை கைதிகளுக்காக வாதாடினார். இந்த வகையில் சிறந்த சேவைக்காக, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திடம் நைட் பட்டம் பெற்றவர். சுற்றுச்சூழல் நலனை பாதுகாப்பதிலும் ஆர்வம் கொண்டவராக, கேள்விகளை முன்வைத்தார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அரசு வழக்கறிஞர்களுக்கான இயக்குநர் என்ற பொறுப்புக்கு உயர்ந்தார்.

ஐந்தாண்டுகளில்ஆட்சியில் அமரவைத்த சூத்திரதாரி

தந்தையின் வழியில் தொழிலாளர் கட்சியில் சேர்ந்து செயலாற்றிய கெய்ர், அந்தக் கட்சி சார்பில் முதல்முறையாக 2015 பொதுத் தேர்தலில் வடக்கு லண்டனில் உள்ள ஹோல்பார்ன் - பான்க்ராஸ் தொகுதியில் வென்று நாடாளுமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தார். அப்போது கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைத்தது.

2019 பொதுத் தேர்தலிலும் தொழிலாளர் கட்சி தோல்வியைத் தழுவ, கட்சியின் தலைமையில் மாற்றம் தேவைப்பட்டது... 2020 ல் நடைபெற்ற கட்சித் தலைவர் தேர்தலில் கெய்ர் ஸ்டார்மர் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் அமர்ந்தார். கட்சித் தலைவராக, ஒவ்வொரு ஊருக்கும் சென்று தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் நேரில் விவாதித்து, ஆலோசித்தார். அவர்களின் ஆலோசனைகளை செவிமடுத்துக் கேட்டார். தொழிலாளர் கட்சி குறித்து பொதுமக்களிடம் இருந்த அதிருப்தியை அழித்து, கட்சித் தலைவரான ஐந்தே ஆண்டுகளில் தனது கட்சிக்கு COMEBACK கொடுத்துள்ளார்.

தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர்களிடம் நற்பெயருடன் செல்வாக்கு பெற்றிருந்த ஸ்டார்மர், ஜெர்மி கார்பினின் நிழல் அமைச்சரவையில் BREXIT அமைச்சராக இருந்தார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்து வெளியேறுவதற்கான BREXIT தேர்தலை நடத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்.

2005ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி 403 இடங்களுடன் வெற்றிவாகை சூடியது. அதன் பிறகு, இந்த ஆண்டு நடந்த தேர்தலில் 410 க்கும் அதிகமான இடங்களில் வெற்றிக்கனியைப் பறிக்க வைத்து, தனது கட்சிக்கு, ஆட்சி அதிகாரத்தை பரிசளித்துள்ளார் கெய்ர் ஸ்டார்மர்...