கமலா ஹாரிஸ் எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் | இத்தனை மில்லியன் டாலர்களா?.. ஒரே மாதத்தில் அதிக நிதி திரட்டிய கமலா ஹாரிஸ்!

Prakash J

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தற்போதைய கருத்துக்கணிப்பில்கூட, கமலா ஹாரிஸே முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது பிரசாரத்துக்குத் தேவையான நிதி கோடிக்கணக்கில் குவிந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் களத்தில் அவர் களமிறங்கிய ஒரு மாதத்திற்குள் 540 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.45,28,83,69) திரட்டியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி மாநாட்டின்போது மட்டும் 82 மில்லியன் டாலர் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது, இந்த நேரத்தில் எந்த அதிபர் வேட்பாளருக்கும் கிடைக்காத அதிகபட்ச நிதியாகும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: சிறையில் புகைபிடிக்கும் நடிகர் தர்ஷன் போட்டோ! சிறப்பு சலுகையா? விசாரணையில் 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

இந்த மாத தொடக்கத்தில், டொனால்டு ட்ரம்ப் தனது பிரசாரத்தின் மூலம் ஜூலையில் டாலர் 138.7 மில்லியன் திரட்டியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. என்றாலும், இது ஹாரிஸ் தனது வெள்ளை மாளிகையின் தொடக்க வாரத்தில் எடுத்ததைவிடக் குறைவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்

முன்னதாக, அவர் தேர்தல் பரப்புரைக்காக நிதி திரட்டுவதில் ஒரே நாளில் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 677 கோடி திரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலில் களம்காணும் எந்தவொரு வேட்பாளரும் 24 மணி நேரத்தில் இந்த அளவுக்கு பெருந்தொகையை திரட்டியதில்லை என அப்போது தரவுகள் குறிப்பிட்டன.

இதையும் படிக்க: ”மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறது” - எச்சரிக்கை விடுத்த டொனால்டு ட்ரம்ப்!