உலகம்

காபூலில் தற்கொலை படை தாக்குதல்: 25 பேர் உடல் சிதறி பலி

காபூலில் தற்கொலை படை தாக்குதல்: 25 பேர் உடல் சிதறி பலி

webteam

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உட்பட 25 பேர் பலியாயினர். 45 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் அடிக்கடி பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் உட்பட பலர் கொல்லப்படுகின்றனர். அவர்களை அந்நாட்டு ராணுவம் வேட்டையாடி வருகிறது. இருந்தாலும் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்கிறது. இந்நிலையில் காபூலில் இன்று காலை இரட்டை தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள்ளது. மத்திய காபூலில் உள்ள ஷஷ்தாராக் பகுதியில் மோட்டார் பைக்கில் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி, பொதுமக்கள் கூடிய பகுதியில் திடீரென வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் பலர் பலியாயினர். 

இந்தச் சம்பவத்தை அடுத்து பத்திரிகையாளர்களும் புகைப்பட கலைஞர்களும் அங்கு கூடினர். அப்போது மற்றொரு தீவிரவாதி, வெடி குண்டை வெடிக்கச் செய்தான். இதில் AFP புகைப்படக்காரர் ஷா மராய், ஆப்கானின் டோலோ என்ற சேனலின் கேமராமேன் உட்பட 25 பேர் பலியானார்கள். மேலும் 45 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  

காபூலின் மேற்கு பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் 60 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.