உலகம்

"எங்கள் பணத்தை எங்களிடமே கொடுங்கள்" - பிறநாடுகளில் உள்ள கையிருப்பை கேட்கும் ஆப்கன் அரசு

"எங்கள் பணத்தை எங்களிடமே கொடுங்கள்" - பிறநாடுகளில் உள்ள கையிருப்பை கேட்கும் ஆப்கன் அரசு

Veeramani

பண நெருக்கடி, பட்டினி மற்றும் இடம்பெயர்வு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம், வெளிநாடுகளில் உள்ள ரிசர்வ் வங்கியின் பில்லியன் கணக்கான டாலர்கள் கையிருப்புகளை விடுவிக்க அழுத்தம் கொடுக்கிறது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் ஐரோப்பாவில் உள்ள பிற மத்திய வங்கிகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் பில்லியன் கணக்கான டாலர்கள் சொத்துக்களை ஆப்கானிஸ்தான் வைத்துள்ளது, ஆனால் ஆகஸ்ட் மாதம் ஆப்கனை தலிபான் கைப்பற்றியதில் இருந்து அந்த பணம் முடக்கப்பட்டுள்ளது.

"பணம் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சொந்தமானது. எங்கள் சொந்த பணத்தை எங்களுக்கு கொடுங்கள். இந்தப் பணத்தை முடக்குவது நெறிமுறையற்றது மற்றும் அனைத்து சர்வதேச சட்டங்களுக்கும், மதிப்புகளுக்கும் எதிரானது" என்று ஆப்கன் நிதி அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஹ்மத் வாலி ஹக்மல் கூறினார்.

. "இந்தப் பணத்தை ஆப்கானிஸ்தானுக்கு வழங்க முடியாவிட்டால், ஐரோப்பா மிகக் கடுமையாகப் பாதிக்கப்படப் போகிறது. மக்களுக்கு உணவு கிடைக்காமலும், வாங்க முடியாமலும் போனால் இரட்டிப்பு ஆதங்கம் இருக்கும். மக்கள் விரக்தியில் இருப்பார்கள். எனவே ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு வெகுஜன குடியேற்றத்தைத் தூண்டக்கூடிய பொருளாதார சரிவைத் தவிர்க்க, இருப்புக்களில் தங்கள் பங்கை ஐரோப்பிய நாடுகள் விடுவிக்கவேண்டும்" என்று ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின் குழு உறுப்பினர் ஷா மெஹ்ராபி கூறினார்.

மேலும், “ஜெர்மனி அரை பில்லியன் டாலர் ஆப்கானிஸ்தான் பணத்தை வைத்திருக்கிறது, பிற ஐரோப்பிய நாடுகளும் வைத்திருக்கும் நிதியையும் விடுவிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு உடனடி நெருக்கடியைத் தடுக்க ஒவ்வொரு மாதமும் 150 மில்லியன் டாலர் தேவை. எங்களின் இருப்புக்கள் தொடர்ந்து முடக்கப்பட்டிருந்தால், ஆப்கானிஸ்தான் இறக்குமதியாளர்கள் தங்கள் ஏற்றுமதிகளுக்கு பணம் செலுத்த முடியாது, வங்கிகள் சரிந்துவிடும், உணவு பற்றாக்குறை ஏற்படும், மளிகை கடைகள் காலியாகிவிடும்" என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்களை கைப்பற்றிய பிறகு பல சர்வதேச நன்கொடையாளர்கள் வெளியேறியதால், நாட்டின் பொதுச் செலவில் முக்கால்வாசிக்கு நிதியளிக்கும் மானியங்கள் நின்று போனது. அமெரிக்கா தனது லயன்ஸ் பங்கான சுமார் 9 பில்லியன் டாலர் நிதியை வெளியிட மாட்டோம் என்று சமீபத்தில் கூறியிருந்தது.