உலகம்

2023லிருந்து டால்கம் பேபி பவுடர் விற்பனையை நிறுத்துகிறோம் - ஜான்சன் & ஜான்சன் அறிவிப்பு

2023லிருந்து டால்கம் பேபி பவுடர் விற்பனையை நிறுத்துகிறோம் - ஜான்சன் & ஜான்சன் அறிவிப்பு

Sinekadhara

வரும் 2023ஆம் ஆண்டிலிருந்து உலகளவில் டால்கம் பேபி பவுடர் விற்பனையை நிறுத்தப்போவதாக தெரிவித்திருக்கிறது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்.

குழந்தைகள் பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பில் உலகளவில் பெயர்பெற்றது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம். ஆனால் இந்த நிறுவன தயாரிப்பான குழந்தைகள் டால்கம் பவுடர் குறித்து உலகளவில் பல்வேறு புகார்கள் எழுந்துவந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கனடா மற்றும் அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பேபி பவுடர் விற்பனையை நிறுத்தியது. இந்நிலையில் தற்போது உலகளவில் அனைத்து நாடுகளிலும் தனது விற்பனையை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது ஜான்சன் அண்ட் ஜான்சன்.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’உலகளவில் இதுகுறித்து பல்வேறு மதிப்பீடுகளை செய்தோம். அந்த காரணிகளின் அடிப்படையில் எங்களுடைய பேபி பவுடரை சோளமாவை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்காரணமாக டால்கம் அடிப்படை ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரின் விற்பனையை 2023ஆம் ஆண்டிருலிருந்து உலகளவில் நிறுத்துகிறோம்’’என்று குறிப்பிட்டுள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின்மீது பல்வேறு நாடுகளில் கிட்டத்தட்ட 38,000 வழக்குகள் தொடரப்பட்டன. பேபி டால்கம் பவுடரில் கல்நார் கலந்திருப்பதாகவும், இந்த பவுடரை பயன்படுத்துவதால் கேன்சர் உட்பட பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் தனது விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி புதுமாதிரியாக உருவெடுக்க தயாராகிறது ஜான்சன் அண்ட் ஜான்சன்.