உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார தடைகள் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை ரஷ்யா எதிர்கொள்ளவேண்டி வரும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், போர் சூழல் ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும், அமைதியான சூழலை ஏற்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொண்டால் அதை தமது நாடு ஆதரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டை அமெரிக்கா தனது நேட்டோ கூட்டணியில் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதை உக்ரைனும் விரும்புகிறது. ஆனால் தனது அண்டை நாடான உக்ரைன் நேட்டோ கூட்டணியில் சேர்வது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என ரஷ்யா அஞ்சுகிறது. உக்ரைனை நேட்டோவில் சேர்க்கவேண்டாம் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துவிட்டது.
இதையடுத்து உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. எந்நேரமும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தமது வீரர்களை தயார் நிலையில் வைத்துள்ளன. ரஷ்யா போர் தொடுக்கும் பட்சத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது.