தைவான் நாட்டிற்கு அருகில் போர் பயிற்சியை மேற்கொள்ள உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. தைவானை சீனா வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ள முயன்றால் தாங்கள் அதில் தலையிடுவோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் எச்சரித்திருந்தார்.இதைத் தொடர்ந்து சீனாவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தைவான் தீவை சுற்றிலும் வான் பகுதியிலும் கடல் பகுதியிலும் பல வகை போர் பயிற்சிகள் நடைபெறும் என சீன பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் டான் கஃபெய் தெரிவித்தார். தைவானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான கூட்டுறவை இலக்காகக் கொண்டு, தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான அவசியமான நடவடிக்கைகள் இவை என்று டான் கூறினார்.
தைவான் நிலவரத்தில் அமெரிக்கா தலையிடுவது நிலைமையை மேலும் சிக்கலாக்கும் எனவும் அவர் தெரிவித்தார். தைவானை விடுவிக்க வெளி சக்திகள் முயன்றால் தக்க பதிலடி கொடுக்க தங்கள் படைகள் தயாராக உள்ளதாகவும் சீன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பல தசாப்தங்களாக தனி ஆளுகைக்கு பிறகும் தைவானை தனது மாகாணமாக சீனா கருதுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங், தேவைப்பட்டால் தைவானை கைப்பற்றி விடுவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.