வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு மற்றும் பத்திரிகைத் துறையில், அமெரிக்கா வாழ் இந்தியரான வேதாந்த் படேல், உதவி பத்திரிகை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு மற்றும் பத்திரிகைத் துறையில், இந்திய-அமெரிக்கரான வேதாந்த் படேலை உதவி பத்திரிகை செயலாளராக நியமித்துள்ளார் பிடன். படேல் தற்போது பிடென் ஸ்டார்ட் எனும் அமைப்பில் மூத்த செய்தித் தொடர்பாளராக உள்ளார். மேலும் பிடெனின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகவும், பிராந்திய தகவல் தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றினார்.
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிடெனின் முதன்மை பிரச்சாரத்தின் போது, படேல் நெவாடா மற்றும் மேற்கு முதன்மை-மாநில தகவல் தொடர்பு இயக்குநராக பணியாற்றினார். இந்தியாவில் பிறந்து கலிஃபோர்னியாவில் வளர்ந்த படேல், கலிஃபோர்னியா - ரிவர்சைடு பல்கலைக்கழகம் மற்றும் புளோரிடா பல்கலைக்கழகத்தில் பயின்ற பட்டதாரி ஆவார்.
அதிபர் ஜோ பிடன் தனது வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு மற்றும் பத்திரிகை ஊழியர்களாக அறிவித்த 16 நியமனங்களில் படேலும் ஒருவராக உள்ளார்.