உலகம்

அமெரிக்காவின் துணை அதிபர் பதவி: களம் காணும் இந்திய வம்சாவளி பெண்!!

webteam

அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரீஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் நாட்டின் துணை அதிபராகும் முதல் பெண் என்ற பெருமையை பெறுவார். துணை அதிபராகும் முதல் இந்திய-அமெரிக்க-ஆஃப்ரிக்க பெண்ணாகவும் அவர் இருப்பார்.

கலிப்போர்னியா மாகாண செனட்டராக இருக்கும் கமலா ஹாரீஸை துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளராக நியமிப்பதாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பிடன் அறிவித்துள்ளார். நாட்டை மீண்டும் சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல தனக்கு சரியான இணையாக கமலா ஹாரீஸ் இருப்பார் என்று ஜோ பிடன் கருத்து தெரிவித்துள்ளார். ஜோ பிடன், பெண் ஒருவரை தான் துணை அதிபராக தேர்வு செய்வேன் என ஏற்கெனவே கூறி இருந்தார்.

துணை அதிபர் பதவிக்கு போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கமலா ஹாரீஸ், தன் வாழ்நாளை அமெரிக்காவுக்காக போராடுவதில் கழித்த ஜோ பிடனால் நாட்டு மக்களிடம் ஒற்றுமையை கொண்டு வர முடியும். ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக ஜோ பிடனுடன் இணைந்து களம் காண்பது பெருமைக்குரியது என தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரீஸ், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பின்னர், வாபஸ் பெற்றார். கமலா ஹாரீஸின் தாயார் சியாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். கமலாஹாரீஸ், 2016ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. இதற்கு முன்பு கலிபோர்னியா மாகாணத்தில் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தவர்.