அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் நிறுத்தப்பட்டிருந்தார். வயது முதிர்வு, தடுமாற்றம் உள்ளிட்ட செயல்களால் ஜோ பைடன் மீது விமர்சனம் வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சிலரும் அவரை அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் அதிபர் பராக் ஒபாமாகூட, ஆட்சபனை தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை, ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் அறிவித்தார். இதனால், அமெரிக்க அதிபர் தேர்தல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா ஹாரீஸ், தேர்தல் பரப்புரைக்காக நிதி திரட்டுவதில் வரலாறு படைத்துள்ளார்.
இந்த நிலையில், தேர்தலிலிருந்து விலகியது ஏன் என அதிபர் ஜோ பைடன் விளக்கமளிக்கத்துள்ளார். இதுகுறித்து அவர், ”நமது தேசத்தை ஒன்றிணைக்க, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கே இதுவே சரியான நேரம். அவர்களுக்கு வழிவிடுவதே சிறந்தது என்று நான் முடிவு செய்தேன். தற்போது நாட்டின் ஜனநாயகத்துக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை காப்பதற்காகவே அதிபர் தேர்தலில் இருந்து விலகியுள்ளேன். அடுத்த 6 மாதங்கள் ஒரு அதிபராக எனது பணியைச் செய்வதில் கவனம் செலுத்துவேன்.
வெறுப்பு, தீவிரவாதங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன். எந்த வன்முறைக்கும் அமெரிக்காவில் இடமில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பது பதவியைவிட முக்கியமானது. நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும். கமலா ஹாரிஸ் மிகவும் அனுபவம் கொண்டவர், திறமையானவர். துணை அதிபராக அவரது செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. தற்போது அமெரிக்காவை வழிநடத்த அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தல், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ”என் மகன் இறந்துவிட்டான்” - எமோஷனலான எலான் மஸ்க்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!