இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவ்வமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது உலக அளவில் பேசுபொருளானது. இதன்காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ”ஈரான் பெரும் தவறை செய்துவிட்டதாகவும், அதற்கான விலையை அந்நாடு கொடுக்க வேண்டி இருக்கும்” என்றும் எச்சரித்துள்ளார். அதேநேரத்தில், ”தேவைப்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்” என்று ஈரான் தலைவர் அலி காமினி தெரிவித்துள்ளார். இதனால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது. ஈரான் தாக்குதல் நடத்தி 2 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், பதிலடி கொடுப்பதில் இஸ்ரேல் தயக்கம் காட்டிவருகிறது. லெபனானை இலக்காகக் கொண்டே இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல் பற்றி குறிப்பிட்டு உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”அமெரிக்காவைவிட இஸ்ரேலுக்கு உலகில் வேறு எந்த நாடும் உதவவில்லை. இஸ்ரேல் பதிலடி தருவது பற்றி இன்னும் முடிவு செய்யாமல் உள்ளது. அவர்களுடைய இடத்தில் நான் இருந்திருந்தேன் என்றால், எண்ணெய் வயல்களை தாக்குவதற்குப் பதிலாக, வேறு இலக்குகளை குறிவைப்பது பற்றி பரிசீலனை செய்திருப்பேன். இஸ்ரேல், தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் எல்லா உரிமையும் உள்ளது” எனப் பேசியுள்ளார்.
மறுபுறம் முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளருமான டொனால்டு ட்ரம்பும் ”ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப், ”ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் இரு பெரும் தலைவர்களின் ஆதரவும் இஸ்ரேலுக்குக் கிடைத்திருப்பதால், அந்த நாடு ஈரானின் அணு உலை, கச்சா எண்ணெய்க் கிடங்குகளை குறிவைத்து விரைவில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், அதற்கு பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் வரும் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், இஸ்ரேலின் தீவிர ஆதரவாளரான ட்ரம்ப், அமெரிக்க அதிபராகும்பட்சத்தில் அவர் இஸ்ரேலுக்கு அதிக அளவில் ராணுவ உதவிகளை மேற்கொள்ளலாம். மேலும், இஸ்ரேல் மீது ஈரான் உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தினால் தீவிரமான பதிலடி கொடுக்கவும் டிரம்ப் ஆதரவு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.