அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், துணை அதிபராக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோரை 2020-ம் ஆண்டின் சிறந்த நபர்களாக டைம் இதழ் தேர்ந்தெடுத்து கெளரவித்துள்ளது.
சுகாதாரப் பணியின் முன்களப் பணியாளர்கள், இன நீதி இயக்கத்தைச் சேர்ந்த அந்தோணி ஃபயூசி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகிய மற்ற மூன்று போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்த ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று 'டைம்' தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் புகைப்படங்களை அட்டைப்படமாக வெளியிட்டுள்ள டைம் இதழ், 'அமெரிக்காவின் கதை மாறுகிறது' என்று தலைப்பிட்டுள்ளது.
'டைம்' இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில், கொரோனா காலகட்டத்திலும் நர்ஸுகள், மருத்துவர்கள், விநியோகம் செய்பவர்கள், கடைகளில் வேலை செய்பவர்கள் என உயிரைப் பணயம் வைத்து வேலை செய்தவர்கள் 2020ஆம் ஆண்டின் சிறந்த நபர்களாக பரிந்துரை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து குறிப்பிட்டுள்ள 'டைம்', கருத்துக்கணிப்பில் போடப்பட்ட 80 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளில் 6.5 சதவீதம் 2020-ல் முன்களப் பணியில் ஈடுபட்டவர்களுக்குத்தான் போடப்பட்டிருந்தது. இவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஃபேஸ்புக் சிஈஓ மார்க் ஜூகர்பெர்க், போப் பிரான்சிஸ் போன்ற சக்திவாய்ந்தவர்களையும் பின்னுக்குத் தள்ளி மக்களின் அதிக வாக்குகளைப் பெற்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.