உலகம்

`இப்போதும் குழம்புகிறேன்... ஆனாலும்!’- மருத்துவமனையில் இருந்தபடி ஜெர்மி ரென்னர் செல்ஃபி!

webteam

விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர், அறுவைச்சிகிச்சைக்கு பிறகான செல்ஃபி படத்தை வெளியிட்டுள்ளார்.

‘அவெஞ்சர்ஸ்’ படம் மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவர் ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர். இவர், இந்தப் படம் மூலம் உலக அளவிலும் ஈர்க்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த புத்தாண்டுத் தினமான ஜனவரி 1ஆம் தேதி, அவருடைய சொந்த வீடு உள்ள வாஷோ மாவட்டத்துக்கு தன்னுடைய காரில் புறப்பட்டார். அன்றைய தினம் அப்பகுதியை சுற்றிப் பல பகுதிகளில் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டது.

இதனால், அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கின. இந்த நிலையில், ஜெர்மி ரென்னர் ஓட்டிச் சென்ற காரும் பனிப்பொழிவில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ரென்னரை, அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி விமானம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ரென்னருக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. என்றாலும், அவர் இன்னும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே உள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ரென்னரைக் காப்பாற்றிய காவல் துறை, தீயணைப்புத் துறை, நண்பர்கள் மற்றும் பிரார்த்தனை செய்யும் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் ரென்னரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஜெர்மி ரென்னர் அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்போதும் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது தெரிகிறது. செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு, ‘எனக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி. நான் இப்போதும் தட்டச்சு செய்ய குழம்பிவிட்டேன். ஆனாலும் நான் உங்கள் அனைவருக்கும் அன்பை அனுப்புகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்