உலகம்

முடிந்தது அறுவைசிகிச்சை; உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐசியு-வில் ஜெர்மி ரென்னர்!

முடிந்தது அறுவைசிகிச்சை; உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐசியு-வில் ஜெர்மி ரென்னர்!

webteam

விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னருக்கு அறுவைச்சிகிச்சை முடிந்தும், அவர் இன்னும் ஆபத்தான நிலையிலேயே உள்ளார்.

’அவெஞ்சர்ஸ்’ படம் மூலம் உலக அளவில் கவனம் ஈர்க்கப் பெற்றதுடன், நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றார், ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர். இவருக்கு அமெரிக்காவில் நெவாடோவின் வாஷோ மாவட்டத்தில் சொந்தமாய் வீடு ஒன்று உள்ளது. அங்கு கடந்த புத்தாண்டுத் தினமான கடந்த ஜனவரி 1ஆம் தேதி அதிகமான பனிப் பொழிவு ஏற்பட்டது. இதனால் அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகள் இருளில் மூழ்கின. இந்தப் பனிப்பொழிவின்போது ஜெர்மி ரென்னர் ஓட்டிச் சென்ற காரும் சாலை தடுப்பில் மீதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய ரென்னர், மீட்கப்பட்டு சிகிச்சைக்காக விமானம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது மருத்துவமனை நிர்வாகம், “அபாய கட்டத்தில் இருக்கும் ரென்னருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ரென்னருக்கு அறுவைச்சிகிச்சைகள் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து அவருடைய உதவியாளர் , “இந்த விபத்தில் அவருக்கு மார்பு பகுதியிலும், இன்னும் சில இடங்களில் காயங்களும் ஏற்பட்டுள்ளன. இதற்காக ரென்னருக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. என்றாலும், ரென்னர் இன்னும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்தே கண்காணிக்கப்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

ரென்னரைக் காப்பாற்றியதற்காக ஜெர்மி குடும்பத்தினர், காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். முக்கியமாய், ரென்னரை, அவர் வீட்டுக்கு அருகில் இருந்த குடும்பத்தினர்கள்தான் மீட்டுள்ளனர். அதில் ஒருவர், மருத்துவராய்ப் பணிபுரிகிறார். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர், ஜெர்மி குடும்பத்தினர். மேலும், ரென்னருக்காக பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்காகவும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

- ஜெ.பிரகாஷ்