உலகம்

கேம்பிரிட்ஜ் பல்கலையின் இளம் பேராசிரியரான கருப்பினத்தவர்.. ஜேசன் ஆர்டே கடந்துவந்த பாதை!

கேம்பிரிட்ஜ் பல்கலையின் இளம் பேராசிரியரான கருப்பினத்தவர்.. ஜேசன் ஆர்டே கடந்துவந்த பாதை!

JananiGovindhan

11 வயது வரை பேசவே முடியாமல் இருந்தவர் தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கருப்பினத்தைச் சேர்ந்த மிகவும் இளைய தலைமுறை பேராசிரியர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார் ஜேசன் ஆர்டே.

37 வயதாகக் கூடிய ஜேசன், கேம்பிரிட்ஜ் பல்கலையின் சமூகவியல் கல்விக்கான பேராசிரியராக அடுத்த மாதம் முதல் பணியாற்ற இருக்கிறார். வளர்ச்சி தாமதம் மற்றும் ஆர்டிசம் ஆகிய குறைபாடுகள் காரணமாக ஜேசன் தன்னுடைய இளம் பருவத்தில் ஏராளமான உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகளை சந்தித்திருக்கிறார்.

ஜேசனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உட்பட பலரும், வாழ்நாள் முழுவதும் எவருடைய துணையும் இல்லாமல் வாழ்வது கடினமானதுதான் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.

இருப்பினும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இளைய கருப்பினப் பேராசிரியராகவும், பல்கலைக்கழகத்தின் ஐவரில் ஒருவராகவும் ஆவதன் மூலம் தன் மீதான அனைவரது கருத்துகளையும் பொய் என உடைத்தெறிந்து நிரூபித்திருக்கிறார் ஜேசன். இதுபோக லண்டனின் 23,000 பேராசியர்களில் 155 பேர் மட்டுமே கருப்பின பேராசிரியராக இருக்கும் நிலையில் ஜேசனின் அதில் ஒருவராக இருக்கிறார்.

தன்னை பற்றி மருத்துவர்கள் உள்ளிட்டோர் கொண்டிருந்த கூற்றுகளை பொய் என நிரூபிக்க, ஜேசன் முதலில் தனக்கான லட்சியங்களை அவரது தாயாரின் அறை சுவற்றில் எழுதி வைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். அதில் ஒன்றுதான், “என்றேனும் ஒருநாள் ஆக்ஃபோர்டு அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவேன்” என எழுதியிருக்கிறார்.

இப்படியாக, தன்னுடைய லட்சியங்களை எழுதி, தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்தி வந்த ஜேசன் சர்ரே பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணியில் சேர்ந்திருக்கிறார். இது குறித்து பேசியுள்ள ஜேசன், “என்னுடைய 18வது வயதில்தான் முறையாகவே எழுத படிக்க கற்றுக்கொண்டேன். உயர் கல்வி படிப்பதற்காக முயற்சித்த போதெல்லாம் பல முறை நிராகரிக்கப்பட்டேன். ஆனால் பலகட்ட கடின உழைப்புக்கு பிறகே தற்போது உலகிலேயே பல்கலைக்கழக தரவரிசையில் 2ம் இடம் பிடித்திருக்கிறேன்.” என்றிருக்கிறார்.

சைகை மொழிகளில் தேர்ந்தவராக இருக்கும் ஜேசன் ஆர்டே, இரு முதுகலை பட்டங்களையும், உடற்கல்வியில் முதுகலை பட்டதாரி பட்டத்தையும், லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலையில் Phd பட்டதையும் பெற்றிருக்கிறார்.