உலகம்

'தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள்' - ட்ரம்பை சமாதானம் செய்யும் மனைவியும், மருமகனும்.!

'தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள்' - ட்ரம்பை சமாதானம் செய்யும் மனைவியும், மருமகனும்.!

webteam

பரபரப்பாக நடந்து முடிந்தது அமெரிக்கத் தேர்தல். பல எதிர்பார்ப்புகளுடன் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. ஆனால் யார் தான் வருவார்கள் என்ற நிலையிலேயே சென்றுகொண்டிருந்தது. ஜோ பைடன் முன்னணியில் இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக சில நாட்களே ஆனது.

இதற்கிடையே நீதிமன்றம் செல்லவுள்ளேன், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவுள்ளேன் என ட்ரம்ப் அடுத்தடுத்து பகீர் கிளப்பினார். இப்படி அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்று தெரிந்துகொள்ள உலகமே உற்றுநோக்குக் கொண்டிருந்தது. ஒருவழியாக நேற்று அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடன் என அறிவித்தன.

இதனையடுத்து ஜோ பைடனின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் உலக அளவில் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இதுவரை ஜோ பைடனின் வெற்றியை ட்ரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை என்பது அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே தெரியவந்துள்ளது.

அதில், ஜோ பைடன் வெற்றியாளராக பொய்யாக காட்டிக் கொள்வதை மக்கள் அனைவரும் அறிவார்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனால், உண்மை என்னவென்றால், இந்தத் தேர்தல் முடிவடைவதற்கான காலம் வெகு தொலைவில் உள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார். ஜோ பைடனை வெற்றியாளர் என எந்தவொரு மாநிலமும் அறிவித்து சான்றிதழ் வழங்கவில்லை என்றும், கடும் போட்டி நிலவியதால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்ட மாநிலங்களில் முடிவுகள் வரவில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் சட்டங்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படுவதையும், சரியான வெற்றியாளரை தேர்வு செய்வது தொடர்பாகவும் நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வாக்குகள் நேர்மையாக எண்ணப்படும் வரை ஓயமாட்டேன் என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தோல்வியை ஒப்புக்கொள்ள வைப்பது தொடர்பாக ட்ரம்ப்புடன் அவரது மருமகனும், மனைவியும் பேசி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ட்ரம்ப் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டுமென அவர்கள் ட்ரம்பிடம் சமாதானம் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன

இதற்கிடையே தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஆட்சி மாற்ற நடைமுறைகளை தொடங்குவது குறித்து தங்கள் தரப்புடன் ட்ரம்ப்போ அல்லது அவரது பிரதிநிதிகளோ இன்னும் தொடர்புகொள்ளவில்லை என்று பைடனின் தேர்தல் பரப்புரை மேலாளர் தெரிவித்தார்.