ஜப்பான் முகநூல்
உலகம்

ஜப்பான்: மனைவிக்கு தினமும் கிட்டதட்ட 100 முறை ஃபோன் செய்த கணவர்! காரணம் என்ன தெரியுமா?

ஜெனிட்டா ரோஸ்லின்

‘காதலுக்கு எல்லை இல்லை... காதலுக்கு கண் இல்லை... காதல் எதுவும் செய்யும்’ என்றெல்லாம் காதலர்கள் சிலர் சொல்லிக் கேட்டிருப்போம். இதையெல்லாம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, பொசசிவ்னெஸ் என்ற பெயரிலும் காதல் என்ற பேர்வழியிலும் தன் இணையை கொடுமை செய்வோரும் இங்குண்டு! அப்படித்தான் ஜப்பானில் ஒரு நபர் இருந்துள்ளார். அவர் செய்தது என்ன? பார்க்கலாம்...

ஜப்பானில் 31 வயது பெண் ஒருவர், காவல்துறையிடத்தில் சமீபத்தில் புகார் ஒன்றினை அளிக்கிறார். அதில், “ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் எனக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட ஃபோன்-கால்கள் வந்துள்ளன. யார் இத்தனை அழைப்புகளை விடுக்கிறார்கள் என்பது, எனக்கே தெரியும். நீங்கள் தயவுசெய்து உடனடியாக நடவடிக்கை மட்டும் எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார். யார் என்று கேட்ட காவல்துறையினருக்கு, இறுதியில் அதிர்ச்சிதான் கிடைத்துள்ளது. காரணம், அத்தனை அழைப்புகளையும் விடுத்தது, அப்பெண்ணின் கணவர்தான்.

சம்பவத்தின்படி, புகார் அளிக்க சென்ற அந்த 31 வயது பெண்ணுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக தினமும் கிட்டதட்ட 100 முறை முன் அறிமுகமில்லா எண்ணிலிருந்து ஃபோன்கால்கள் வந்துள்ளன. அதை Attend செய்து பேசினால், மறுபுறம் இருக்கும் நபர் எதும் பேசாமல் Cut செய்து விடுவாராம். இதுவே தொடர்கதையாக இருந்துள்ளது.

இது குறித்து இப்பெண், தனது கணவரிடம்தான் முதலில் கூறியுள்ளார். ஆனால் அவரோ, அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், அதெல்லாம் ஒன்னுமில்ல... பயப்படாத என்று இதை அலட்சியமாக விட்டுள்ளார். முதலில் கணவர் தன்னை ஆறுதல்படுத்தவே இப்படி ரியாக்ட் செய்கிறார் என்றே அப்பெண் எடுத்துக்கொண்டுள்ளார். ஆனால் பின்னாள்களில் சற்றே சந்தேகம் வந்துள்ளது. இதனால் கணவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார்.

அப்படி கவனித்ததில், அக்கணவர் தூங்கிக் கொண்டிருக்கும்போதும், வீடியோ கேம் விளையாடும்போதும் , தன்னுடன் இருக்கும்மோதும்... எந்த அழைப்புகளும் தனக்கு வராததை உணர்ந்துள்ளார் அப்பெண். இதனால், தனக்கு இப்படி ஃபோன்கால் செய்து தொந்தரவு அளித்தது தனது கணவராக இருக்குமோ?.. என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, இதை உறுதி செய்துகொள்ள.. ஒரு நாள் தன் கணவரை வலுக்கட்டாயமாக ஷாப்பிங்கிற்கு அழைத்து சென்றுள்ளார். அந்த நாள் முழுவதும், தனது கணவர் தொலைப்பேசியையே எடுக்காததையும் அதே நேரத்தில் எப்பொழுதும் வரும் வெற்றுக்கால் வராததையும் கவனித்துள்ளார். இதன்பிறகு, உடனடியாக காவல்துறைக்கு விரைந்த அப்பெண், நடந்தவற்றை தெரிவிக்கவே உடனடியாக அக்கணவரை அழைத்த காவலர்கள், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவரது ஃபோனை சோதனை செய்து பார்த்ததில், அந்த வெற்று கால்களை செய்ததே இவர்தான் என்று உறுதியாகியுள்ளது.

ஏன் இப்படி செய்தீர்கள் என்று அவரிடம் போலீஸார் கேட்டதற்கு, “ஒருமுறை என் மனைவியிடம் இன்னொரு ஆண் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவரும் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் எனது மனைவி மற்ற ஆண்களுடன் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. அதானால்தான் வேறு யாரும் என் மனைவியிடம் பேசக்கூடாது என நினைத்து, இப்படி செய்தேன். இவ்விஷயத்தில் பிற ஆண்களுடன் பேசும் என் மனைவி மீதும் எனக்கு கோபம். ஆகவே அவரை தண்டிக்கும் நோக்கத்திலும் இச்செயலை நான் செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய சட்டத்தை பொறுத்தவரை தொல்லை தரும் வகையில், ஃபோன் கால்கள் மேற்கொள்வது சட்டவிரோதமானது. இச்செயலுக்கு தண்டனையாக, ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது 1 மில்லியன் யென் (இன்றைய இந்திய மதிப்பில் சுமார் ரூ 6 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இந்தவகையில், கைது செய்யப்பட்டுள்ள இந்நபர் செய்தது சட்டப்படி குற்றமாகும். ஆகவே அவருக்கு தண்டனை கிடைக்குமென உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் அவருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது என்பது குறித்தான தகவல்கள் கிடைக்கவில்லை.