நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில் பழுவின் காரணமாக நாம் சிரிப்பதையே மறந்துவிடுகிறோம். சிரிக்க மறப்பதால், உடல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுகிறது. சிரிக்க மறப்பதால் நாளுக்கு நாள் மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்ற பழமொழியை போல, சிரிக்கும் போதுதான், நம் மனதில் உள்ள மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் குறைந்து, உடலுக்கு புது தெம்பையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
இதனை கருத்தில் கொண்டு, ஜப்பான் யமகட்டா மாகாணத்தில் வசிக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பதை கட்டாயமாக்கி அந்நாட்டின் சுதந்திர ஜனநாயக கட்சி சட்டம் இயற்றியுள்ளது.
யமகட்டா மாகாணத்தில் பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள் குழுவால் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இது 40 வயதுக்கும் அதிகமான 17,152 பேரிடத்தில் நடத்தப்பட்டது. அதில், அன்றாடம் மனம் விட்டு சிரிப்பது இதய நோய் போன்ற அபாயங்கள் ஏற்படுவதை குறைப்பதாக தெரிவிக்கிறது.
இதய சார்ந்த நோய்கள் மட்டுமல்ல உளவியல் சார்ந்த மன அழுத்தம், பதற்றம் போன்றவையும் பெருமளவில் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை கொண்டுதான், இம்மாகாணத்தில் உள்ள மக்கள் அன்றாடம் ஒரு முறையாவது சிரிக்க வேண்டும் என்ற சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஜப்பானின் மற்ற மாகாணங்களில் மாதத்தின் எட்டாவது நாளை சிரிப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த உத்தரவில்,” ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது சிரிப்பது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆகவே, சிரிப்பின் நன்மைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அதனை ஊக்குவிப்பதற்காகவும் இது சட்டமாக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், சிரிப்பதா வேண்டாமா என்பது அரசியல் சாசனத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமை என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரூபாய் நோட்டை சேதப்படுத்தினால், ஒரு ஆண்டுகாலம் சிறைதண்டனை என ஜப்பானில் உள்ள சட்டங்கள் ஏற்கெனவே மற்ற நாடுகளிலிருந்து வேறுபட்டு இருக்க கூடிய சூழலில், இச்சட்டத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.