உலகம்

'இளைஞர்களே நன்றாக குடியுங்கள்!' - மது விற்பனையை அதிகரிக்க ஜப்பான் அரசின் புதிய அறிவிப்பு

'இளைஞர்களே நன்றாக குடியுங்கள்!' - மது விற்பனையை அதிகரிக்க ஜப்பான் அரசின் புதிய அறிவிப்பு

Sinekadhara

பெரும்பாலான மக்கள் அந்தந்த நாடுகள் மற்றும் மாநிலங்களின் அரசுகள் போதை மறுவாழ்வு பரப்புரைகளை ஊக்குவித்து நடத்தவேண்டும் என்றே ஆசைப்படுவர். ஆனால் அதற்கு எதிர்மாறான செயலில் இறங்கியிருக்கிறது ஜப்பான் அரசு. இளைஞர்களை மதுகுடிக்க ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது ஜப்பான் அரசு.

கொரோனா கால பொதுமுடக்கத்தால் மது அருந்தும் பழக்கம் குறைந்துவிட்டதும், இதனால் அரசுக்கு வரும் வரி வருவாய் பெருமளவில் குறைந்துவிட்டதுமே இந்த அறிவிப்புக்கு காரணம் என்றும் கூறியிருக்கிறது அந்நாட்டு அரசு.

ஜப்பான் அரசுக்கு 110 பில்லியன் யென்(yen - ஜப்பான் பணம்)க்கும் அதிகமான மது வரி வருவாய் 2020இல் குறைந்துவிட்டதாகவும், கொரோனா பொதுமுடக்கத்தால் பார்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் மது அருந்துவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாகவும் தி ஜப்பான் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் கடந்த 31 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மது வரி வருவாயில் சரிவை சந்திருக்கிறது ஜப்பான் அரசு.

இதன் விளைவாக இதற்கு தீர்வுகாண அரசு முடிவுக்கு வந்துள்ளது. அதுதான் "The Sake Viva" போட்டி. இது ஜப்பானின் தேசிய வரி ஏஜென்சியால் நடத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறது தி கார்டியன். மேலும் தனது சகாக்களிடையே குடிப்பழக்கத்தை ஊக்குவிக்க யோசனைகளையும் கேட்டுவருகிறது இந்த ஏஜென்ஸி. அதுமட்டுமல்லாமல் மது பழக்கத்தை அதிகரிக்க என்னென்ன மாதிரியான வடிவங்களில் தயாரிக்கலாம் என்பதையும் கேட்டிருக்கிறது. மேலும் நாட்டுமக்கள் மெட்டாவேர்ஸ் உட்பட விற்பனை முறைகளையும் ஆராயுமாறு அந்த ஏஜென்ஸி கேட்டுக்கொள்வதாக தி கார்டியன் தெரிவித்துள்ளது. இந்த பரப்புரைக்கு பலதரப்பட்ட கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன.

உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கத்தை அரசு ஊக்குவிப்பதாக சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்து வருகின்றனர். ’’அவர்கள் வரி வசூலிக்கும்வரை மக்களின் ஆரோக்கியம் ஒரு பொருட்டே அல்லவென்று நினைக்கிறேன்’’ என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். ’’இளைஞர்கள் குடிக்காமல் இருப்பது நல்ல விஷயம். ஏன் அவர்களை அடிமைகளாக்குகிறீர்கள்?’’ என்று மற்றொரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேசமயம் மற்றொருபுறம் சிலர் ஐடியாக்களை கொடுத்துவருகின்றனர். ஐடியாக்களை அனுப்ப செப்டம்பர் இறுதிவரை நேரமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தேர்ந்தெடுக்கப்படும் ஐடியாக்கள் நிபுணர்களின் உதவியுடன் நவம்பரில் நடைமுறைக்கு கொண்டுவரப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.