பணி நேரத்திற்கிடையே தூக்கம் வராத, தூங்காதவர்களை பார்த்திருக்கவே முடியாது. அதுவும் தொடர்ச்சியான வேலையில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் அயர்ச்சி அவர்களை ஒழுங்காக வேலையும் செய்ய விடாமல், தூங்கவும் விடாமல் செய்யும்.
அதன் காரணமாக பல ஊழியர்களும் பாத்ரூமிற்கு சென்று சிறிது நேரம் தூங்கிவிட்டு வருவதும் நிகழும். இதனால் அந்த ஊழியரால் சற்று விழிப்படைந்து வேலையை தொடர்வார்கள்.
பணியாளர்களின் இப்படியான சிரமங்களை குறைக்கும் வகையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று முக்கியமான, தேவையான முன்னெடுப்பை கையிலெடுத்துள்ளது. அதாவது, அலுவலக வேலைக்கிடையே தூக்கம் வந்தால் அந்த ஊழியர் தாராளமாக நின்றபடியே வசதியாக தூங்கிக்கொள்ளலாமாம்.
அது எப்படிங்க சாத்தியம்? எல்லாரும் பார்க்க மாட்டாங்களா? என்ற கேள்வி எழலாம். அங்கதான் ட்விஸ்ட்டே. அது என்னனா.. தன்னுடைய ஊழியர்கள் ஸ்ட்ரெஸ் இல்லாமல், வேலையும் செய்து அதே சமயத்தில் தூக்கம் வந்தால் தூங்கவும் செய்வதற்கு முக்கியமான ஏற்பாட்டை தான் அந்த ஜப்பான் நிறுவனம் செய்திருக்கிறது.
அதற்காக, அலுவலகத்தில் Nap Box என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த பாக்ஸினுள் சென்று உட்புறமாக தாழிட்டு ஊழியர்கள் நின்றபடியே தூங்கிக்கொள்ளலாம். நின்றுக்கொண்டே தூங்கினால் முதுகு, கால்கள் வலிக்குமே என்று கேட்பதும் புரிகிறது.
அப்படியான தொந்தரவுகள் ஏதும் ஏற்பாடத வகையில் தலை, முழங்கால்கள் மற்றும் முதுகு அனைத்தும் வசதியாகத் தாங்கும் வகையிலும், உள்ளே செல்பவர் கீழே விழாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் அந்த Nap Box வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.
Kamin Box என அழைக்கப்படும் இந்த பெட்டியை டோக்கியோவைச் சேர்ந்த Itoki என்ற ஃபர்னிச்சர் நிறுவனத்துடன் இணைந்து Koyoju plywood corporation உருவாக்கியிருக்கிறது.
அந்த பெட்டியில் ஃபிளமிங்கோ பறவையைபோல ஊழியர்கள் தூங்கிக்கொள்ளலாமாம். கழிவறைகள் நிம்மதியாக தூங்குவதற்கான இடமாக இல்லை. அது ஆரோக்கியமானதும் இல்லை. ஆனால் இந்த பாக்ஸ் வசதியாக இருக்கும் என Itoki ஃபர்னிச்சரின் இயக்குநர் சாகோ கவாஷிமா bloomberg செய்தியிடம் கூறியிருக்கிறார்.
மேலும், "பல ஜப்பானியர்கள் இடைவேளையின்றி தொடர்ந்து வேலை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆகவே நிறுவனங்கள் இந்த பாக்ஸை ஓய்வெடுப்பதற்கான மிகவும் நெகிழ்வான அணுகுமுறையாகப் பயன்படுத்தலாம் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் சாகோ கவாஷிமா கூறியுள்ளார்.
முன்னதாக, உலகிலேயே ஜப்பானில்தான் அதிக நேரம் ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள் என்பதால் இயற்கையான உயிரியல் மற்றும் ஆரோக்கிய தேவைகளை புறக்கணிக்க முடியாது. மறுசீரமைப்பான ஓய்வு நன்றாக வேலை செய்ய வைக்கும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருவதுண்டு.