இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தா வேகமாக நீரில் மூழ்கும் நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
ஜாவா தீவின் எல்லையோரம், 13 நதிகளால் சூழப்பட்டு எழில்மிகு நகரமாக காட்சியளிக்கிறது ஜகார்த்தா. நதிகளின் நரம்பால் சூழ்ந்த ஜகார்த்தா நகரில் வெள்ளம் வருவது ஆச்சர்யம் படக்கூடிய விஷயமில்லை. ஆனால் வெள்ளத்தால் விரைவில் அழிக்கக்கூடிய அபாயகரமான பகுதியாக உள்ளது ஜகார்த்தா.
பூவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2005 மற்றும் 2050 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் கடலோரத்தில் இருக்கும் 136 பெரு நகரங்கள் கடலில் மூழ்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் ஜகார்த்தா நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் ஜகார்த்தாவில் உள்ள ஒரு கோடி பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஜகர்த்தாவில் இருந்து கோடிக்கணக்கானோர் வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக ஜகார்த்தாவில் ஆய்வு செய்த பாண்டுங் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 2050 ஆம் ஆண்டு ஜகார்த்தா 95 சதவிகிதம் வரை மூழ்கடிக்கப்படும் என எச்சரிக்கிறது. ஆண்டுதோறும் ஏற்படும் மழை மற்றும் வெள்ளத்தால் 1 முதல் 15 செ.மீ வரையிலான தரைத்தளங்கள் மூழ்கடிக்கப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
வரலாற்று துறைமுக நகரங்களில் பழமையானதாக கருதப்படும் ஜகார்த்தாவில் தற்போது 10 லட்சம் மீனவர்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கடல் அலையின் வேகம் 5 செ.மீ வரை அதிகரித்து வருவதை தாங்கள் உணர்ந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஜகார்த்தா விரைவில் நீரில் மூழ்ககுவதற்கு காரணம் நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மையை அந்நகரம் இழந்ததே எனத் தெரியவந்துள்ளது.
வெள்ள நீரை நிலத்தடி நீராக மாற்ற டோக்கியோவில் செயற்கை ரீசார்ஜ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் ஜகார்த்தாவிலும் தேங்கும் மழை நீரை நிலத்தடிக்கு கொண்டு செல்ல முயற்சி எடுத்தனர். ஆனால் இதற்கு நிறைய செலவுகள் ஆகும் என்பதால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. ஜகார்த்தாவில் வாழ்வது ஆபத்து என்பது தெரிந்தும், பிறந்த மண்ணை விட்டு வெளியேற மனமில்லாமல், இயற்கையின் கருணையை எதிர்நோக்கி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.