அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 101 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் கட்சி 75 இடங்களிலும் பிலாவல் பூட்டோவின் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தன. அந்த வகையில் 2வது மற்றும் 3வது இடம்பிடித்த நவாஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோ ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கூட்டணி அரசை அமைப்பதற்கான முயற்சியில் கடந்த சில நாட்களாகப் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தற்போது அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, ஷெரீப் - பிலாவல் பூட்டோ கூட்டணி அரசு அமைய இருக்கிறது. கூட்டணி அரசு அமைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய தலைவரான ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்துள்ளார்.இரு கட்சிகளின் தலைவர்களும் அரசை அமைப்பதற்காக மீண்டும் கைகோர்க்க முடிவு செய்து, அதனை உறுதிசெய்துள்ளனர். தேசத்தின் சிறந்த நலனுக்காக என கூறி அவர்கள் கூட்டணி அரசை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதனால், முன்னாள் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராகவும், முன்னாள் அதிபரான சர்தாரி நாட்டின் புதிய அதிபராகவும் வரக்கூடும். அதற்கேற்ப இருவரையும் அதற்கான வேட்பாளராக பிலாவல் பூட்டோ உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் நவாஸ் பதவியேற்றுள்ளார். அம்மாகாணத்தின் பெண் ஒருவர் முதலமைச்சராகப் பதவியேற்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில், சில ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தால் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் நிறுவனர் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நேற்று (பிப்.23) எழுதியிருக்கும் அந்தக் கடிதத்தில், ’பாகிஸ்தானுக்கு ஏதேனும் புதிய கடன் வழங்க ஒப்புதல் அளிக்கும் முன்பு, தேர்தல் முடிவுகளை தணிக்கை செய்ய வேண்டும்’ எனக் கோரியிருப்பதாகவும், மேலும் அதில், ‘இதுபோன்ற சூழலில், நாட்டுக்கு கடன் வழங்கப்பட்டால், அதனை திருப்பிச் செலுத்துவது யார்? இந்தக் கடனானது, வறுமையை இன்னும் அதிகரிக்க வழிவகுப்பதுடன், நாட்டின் மீது சுமையை கூடுதலாக ஏற்றும்’ என எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய நிதியம் ஆர்வம் தெரிவித்திருப்பதாகவும், இம்ரான் கானுடைய கோரிக்கையை புறந்தள்ளி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் இஷாக் டார், ’தனிப்பட்ட லாபத்திற்காக எதனையாவது எழுதுவது என்பது வெட்கக்கேடானது. நாட்டின் தேசிய நலனுக்கு எதிராக பிடிஐ நிறுவனர் எழுதியிருந்தால் அது கண்டிக்கத்தக்கது. பிடிஐ நிறுவனரின் கடிதத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது. வரலாறு காணாத அளவுக்கு அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது நினைவுகூரத்தக்கது.