உலகம்

'எங்களை இணைத்தது தபால்தான்!" - இந்தியா Vs ஆஸி. மேட்ச்சில் ஹிட்டான ஜோடியின் காதல் கதை!

'எங்களை இணைத்தது தபால்தான்!" - இந்தியா Vs ஆஸி. மேட்ச்சில் ஹிட்டான ஜோடியின் காதல் கதை!

kaleelrahman

இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இணையத்தில் வைரலாகிய ஜோடியின் காதல் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளது. இந்தக் காதலை இணைத்ததில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது 'தபால்'.

இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய இளைஞர் ஒருவர், ஆஸ்திரேலிய பெண் ஒருவரிடம், ஸ்டேடியத்திற்குள் தனது காதலை வெளிப்படுத்தினார். அதற்கு அந்தப் பெண்ணும் 'ஓகே' சொல்லியுள்ளார். இதையடுத்து கிரிக்கெட் ஆரவாரத்துடன், அந்த காதல் ஜோடி ஸ்டேடியத்திற்குள்ளேயே கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்த வீடியோ வைரலானது. எனினும், அந்த ஜோடியின் விவரங்கள் குறித்து தெரியாமல் இருந்தது. தற்போது அந்த ஜோடியின் காதல் கதை குறித்து தெரியவந்துள்ளது.

அந்த இந்திய இளைஞரின் பெயர் தீபன் மாண்டலியா. அவரின் காதலி பெயர் ரோசிலி விம்புஷ் என்ற ரோஸ். சிட்னியில் தங்கியிருந்த தீபன், 2018 அக்டோபரில் மெல்போர்னுக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு ஒரு அப்பார்ட்மென்ட் வீட்டில் குடியிருந்துள்ளார். தீபனுக்கு முன்பு அதே வீட்டில் குடியிருந்தவர்தான் ரோஸ். அப்போது ரோஸ் பெயருக்கு தபால் வர, அதை அவரிடம் நேரில் ஒப்படைக்க முயன்றுள்ளார் தீபன்.

ஆனால், அவரின் விவரங்கள் தெரியாத நிலையில் ஃபேஸ்புக்கில் அப்பார்ட்மென்ட் குடியிருப்பாளர்கள் பிரைவேட் குரூப்பில் ரோஸ் இருப்பதை அறிந்து அவரைத் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் ரோஸை சந்தித்து தபாலை கொடுத்துள்ளார். இதன்பின் அவர்கள் நண்பர்களாக பழக, காதல் வந்துள்ளது.

"2 ஆண்டுகளுக்கு முன்பு, நான் மெல்போர்னில் இந்த சிறிய குடியிருப்பில் குடியேறினேன். இந்த வீடு என் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பது அப்போது எனக்குத் தெரியாது. நீங்கள் வீடு மாறும்போது, முந்தைய குடியிருப்பாளர்களின் தபால் உங்களில் பலருக்கு கிடைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன். எனக்கும் அப்படி ஒரு தபால் வந்தது. அந்தத் தபாலில் இருந்த பெயர் ரோஸிலி விம்புஷ். இப்படித்தான் எங்கள் சந்திப்பு நடந்தது.

எங்களுடைய முதல் சந்திப்பு மறக்க முடியாதது. தபாலைக் கொடுக்க சென்றபோது உண்மையில், நான் அவரைப் பார்த்தபோது பதற்றமாகவும் பேசவும் பயந்தேன். வெறும் 10 நொடிகளில் அந்தச் சந்திப்பு முடிந்துவிட்டது. தபாலை கொடுத்ததும் இரண்டு பேரும் `குட் பை' சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம். ஆனால் அதன்பிறகே நாங்கள் நெருக்கமானோம்.

கிரிக்கெட் எப்போதுமே எங்களுக்குள் ஒரு சர்ச்சைக்குரியதாக இருந்தது. இந்தியா vs ஆஸ்திரேலியா என நாங்கள் எங்கள் அணிக்காக விசுவாசத்தை காட்டி விவாதித்ததாலும், அது எங்களை ஒன்றிணைத்தது. கிரிக்கெட் எங்கள் உறவின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருந்ததால், காதலைச் சொல்ல இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியை தவிர, வேறு ஒரு சிறந்தசந்தர்ப்பம் இருந்திருக்க முடியாது என எண்ணினேன். காதலை வெளிப்படுத்தினேன்.

இன்று, அவளை என் பக்கத்திலேயே வைத்திருக்கும் நான் ஓர் அதிர்ஷ்டசாலி. இப்பொழுதும் எப்பொழுதும் இன்னும் நாங்கள் `நீண்ட இன்னிங்ஸ்' செல்ல வேண்டி இருக்கிறது. நாங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளோம் என்பது தெரியும். எங்களுக்கு அனுப்பப்பட்ட அனைத்து அன்பு, ஆதரவுகளுக்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் உண்மையிலேயே நன்றி சொல்ல விரும்புகிறேன்!" என நெகிழ்ந்துள்ளார் இந்திய இளைஞர் தீபன்.