israel war x page
உலகம்

காஸாமீது தாக்குதல்.. பலியாகும் அப்பாவி உயிர்கள்.. போர் குறித்து அமெரிக்காவில் பேசப் போகும் இஸ்ரேல்!

காஸாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஐ.நா நடத்தும் பள்ளியின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Prakash J

ஹமாஸ் மீது தொடர் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்!

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை, ’ஹமாஸை அடியோடு ஒழிக்கும்வரை போர் நிறுத்தம் என்பது இல்லை’ என சூளுரைத்து காஸா மீது தொடர்ந்து தாக்குதலை நடத்திவருகிறது. இஸ்ரேலின் தாக்குதலால் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் உலக நாடுகள் இந்தப் போரை நிறுத்தச் சொல்லி வலியுறுத்தி வருகின்றன.

ஆயினும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில், காஸாவின் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள நிலையில், கடைசி இலக்காக ரஃபா நகரைக் குறிவைத்துள்ளது. இந்த நிலையில், காஸாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஐ.நா நடத்தும் பள்ளியின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 14 பேர் குழந்தைகள் என்றும் 9 பேர் பெண்கள் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: வினாத்தாள் கசிவு.. ரிசல்ட்டில் குளறுபடி? நீட் தேர்வு குறித்து அடுக்கடுக்காக எழும் குற்றச்சாட்டுகள்!

இடம்பெயரும் மக்களைக் குறிவைக்கும் இஸ்ரேல்!

இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலிலும் 14 பாலஸ்தீனர்கள் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போரினால் இடம்பெயர்ந்த மக்கள், பள்ளிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் அமைப்பு தாக்குதல் நடத்திவருகிறது குறிப்பிடத்தக்கது. ’இந்தப் போரால் அப்பாவி பெண்கள், குழந்தைகள் பலியாகி வருவதால் போரை உடனே நிறுத்தவேண்டும்’ என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ’ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் தொடரும் என்றும், ஹமாஸை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.

முடிவு எட்டப்படாத பேச்சுவார்த்தை!

இதனால் இந்தப் போரை நிறுத்த கத்தார் உள்ளிட்ட நாடுகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தநிலையில் இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸ் அமைப்பினர் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை என கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மஜித் அல்- அன்சாரி தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் தொடர்ந்து போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: கங்கனாவை அறைந்த விவகாரம்| பெண் காவலருக்கு கிளம்பும் ஆதரவும், எதிர்ப்பும்! விவசாயிகள் எடுத்த முடிவு!

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் இஸ்ரேல் பிரதமர்!

இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜூலை 24ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருப்பதாக குடியரசுக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ”அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் நடைபெறும் போர் தொடர்பான சில உண்மைகளைத் தெரிவிக்க இருக்கிறேன்” என்று நெதன்யாகு கூறியதாக அந்தத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரயேல் பிரதமர் - பென் ஜமின் நெதன்யாகு

இதுகுறித்து பெஞ்சமின் நெதன்யாகு, “அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. எங்களை அழிக்க நினைப்போருக்கு எதிராக நாங்கள் நடத்திவரும் போர் தொடர்பான உண்மைகளை அமெரிக்க மக்களின் பிரதிநிதிகளுக்கும் உலகம் முழுவதுக்கும் அப்போது தெரிவிப்பேன்” என்று அவர் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

காஸாவில் பெருகும் வேலையில்லா திண்டாட்டம்!

இதற்கிடையே, ‘இஸ்ரேலின் செயல்கள் அனைத்தும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது’ என்று ஓமன் அரசு தெரிவித்துள்ளது. ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்ரேல் அதிகாரிகள், ராணுவத்தினர், நெசட் எனப்படும் குழுவினர் அணிவகுத்து சென்று பள்ளிவாசலை தாக்கியதாக ஓமன் அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, காஸாவில் வேலையில்லா திண்டாட்டம் 80 சதவீதத்தை நெருங்குவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவித்துள்ளது. மேலும் பட்டினியாலும் நிதி நெருக்கடியாலும் பலர் வாழ்வைத் தொலைத்து வருகின்றனர்.

இதையும் படிக்க: இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்துகிறதா ’ஹமாரே பாரா’ பாலிவுட் திரைப்படம்? தடைவிதித்த கர்நாடக அரசு!