ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் pt web
உலகம்

மத்திய கிழக்கில் போர்மேகம்.. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்.. நியாயப்படுத்திய அமெரிக்கா!

ஈரான் தலைநகர் தஹரன் மற்றும் கராஜ் ஆகிய நகரங்களில் ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா இஸ்ரேலை எச்சரித்துள்ளது.

Angeshwar G

அண்மையில் இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானைச் சுற்றியுள்ள இராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

Daniel Hagari

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதை இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியர் ஹகேரி உறுதி செய்துள்ளார். கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேலும் தாக்குதலில் இறங்கியுள்ளது. ஈரானுடைய ராணுவ தளவாடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. தாக்குதலின் முதல் சுற்று முடிவடைந்த நிலையில், இரண்டாம் சுற்று வரை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இஸ்ரேலுக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற தனிப்பட்ட அமைப்புகளுக்கும் இடையே நடந்த மோதல் ஈரான் வரை விரிவடைந்த நிலையில், ஈரானை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என இஸ்ரேல் நடத்திவரும் எதிர்த்தாக்குதல் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக ஈரான் அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்காத நிலையில், ஈரானின் உள்ளூர் ஊடகங்களும், அரபு நாடுகளின் ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. மேலும், ஈரான் அரசு தங்களது விமான சேவையை நிறுத்தியுள்ளது. வான்வெளியை மூடி இருக்கிறது என்கிற முதற்கட்ட தகவல்களும் வெளியாகியுள்ளன. இதுவரை 19 தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ராணுவத் தளபதிகளின் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளதாகவும் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மீண்டும் போர் சூழல் உருவெடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் முடிவெடுக்க அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் தேசிய கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை மேற்கொண்டது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ஈரானில் அணு உலைகள், எண்ணெய் கிடங்குகளை குறி வைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது. மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பெண்டகன் இதுகுறித்து கூறுகையில், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்காவின் ஆலோசனையோ ஒத்துழைப்போ நேரடியாக இல்லை என தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் நடைபெறும் நிகழ்வுகளையும் சூழலையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.