உலகம்

விமானத்திற்குள் சிகரெட்.. தீப்பற்றிக்கொண்ட டாய்லெட்! பயணியின் செயலால் நடுவானில் பரபரப்பு

விமானத்திற்குள் சிகரெட்.. தீப்பற்றிக்கொண்ட டாய்லெட்! பயணியின் செயலால் நடுவானில் பரபரப்பு

Sinekadhara

மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, உலக அளவில் விமானத்தில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானம் தரையிறங்கும்வரை பொறுத்துக்கொள்ள முடியாத பயணி ஒருவர் விமானத்தினுள்ளேயே சிகரெட்டை பற்றவைத்திருக்கிறார். அது கடைசியில் விமானத்தில் தீப்பிடிக்க காரணமாகியிருக்கிறது.

வெள்ளிக்கிழமை இஸ்ரேல் பயணி ஒருவர் El Al விமானத்தில் டேல் ஆவிவிலிருந்து பேங்காக் வரை பயணம் மேற்கொண்டுள்ளார். விமானம் தரையிறங்கும் வரை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பயணி, விமான கழிவறைக்குச் சென்று சிகரெட்டை பற்றவைத்துள்ளார். உடனே அங்கு பொறுத்தப்பட்டிருந்த அலாரம் அடிக்க துவங்கியிருக்கிறது. அதைக்கேட்டு அரண்டுபோன பயணி பற்றவைத்த சிகரெட்டை அணைக்காமல் குப்பைத்தொட்டியில் போட்டுள்ளார். இதனால் குப்பைத்தொட்டியில் இருந்த டிஸ்யூ பேப்பர்களில் தீப்பற்றி பரவத்தொடங்கியிருக்கிறது.

அலாரம் ஒலிக்கும் சத்தம்கேட்ட விமான ஊழியர்கள் உடனடியாக கழிவறைக்குச் சென்று, அங்கு எரிந்துகொண்டிருந்த தீயை தீயணைப்பானை பயன்படுத்தி அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. விமானத்தில் பாதிப்புகளும் பெரிதளவில் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக விமானம் பேங்காக்கில் பத்திரமாக சென்று தரையிறங்கியது.

இதுகுறித்து El Al விமான அதிகாரி கூறுகையில், ”திட்டமிட்டிருந்தபடி சரியான நேரத்தில் விமானம் பத்திரமான பேங்காக் விமான நிலையத்தில் தரையிறங்கியது. சிகரெட் பற்றவைத்த பயணிக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை சட்டத்துறையால் மேற்கொள்ளப்படும். தாய்லாந்திலிருந்து அந்த பயணி இஸ்ரேல் வந்தவுடன் சட்டரீதியான சிக்கல்களுக்கு பதில்சொல்ல வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.

1980கள் வரை விமானங்களில் புகைபிடிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் தற்போது பெரும்பாலும் அனைத்து சர்வதேச விமான சேவைகளும், பெரும்பாலான அரசுகளும் விமானத்திற்குள் புகைபிடிக்க தடை விதித்திருக்கிறது. 1973ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவிலிருந்து பாரிஸுக்கு சென்றா வாரிக் விமானம் 820 விபத்துக்குள்ளாகி 123 பயணிகள் உயிரிழந்தனர். அந்த விபத்திற்கு காரணம் தீயை அணைக்காமல் பயணி ஒருவர் சிகரெட்டை குப்பைத்தொட்டியில் போட்டதுதான்.