ஊழல் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து, முன் கூட்டியே தேர்தலை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் பிரதமராக அதிக ஆண்டுகள் இருந்தவர் என்ற சிறப்புக்குரியவர் பெஞ்சமின் நெதன்யாஹு. 2009 ஆண்டு முதல் தற்போது வரை அவர் தொடர்ச்சியாக இஸ்ரேல் பிரதமராக இருந்து வருகிறார். இதற்கு முன்பாக, 1996 முதல் 1999 வரை பிரதமராக இருந்துள்ளார். மொத்தம் நான்கு முறை அவர் பிரதமராக பதவி வகித்துள்ளார். நெதன்யாஹு அவரது லிகுட் கட்சியின் தலைவராகவும் உள்ளார். 2015 பொதுத் தேர்தலில் லிகுட் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.
இதனிடையே, நெதன்யாஹுவின் லிகுட் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. கூட்டணி கட்சியைச் சேர்ந்த அவிக்டர் லிபர்மேன் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து கடந்த மாதம் ராஜினாமா செய்தார். காஸா பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வெளியேறினார். மேலும், ஊழல் குற்றச்சாட்டு, நம்பிக்கை மீறில் உள்ளிட்ட மூன்று முக்கிய விவகாரங்களில் நெதன்யாஹு வழக்குகளை சந்தித்து வருகிறார். கோடீஸ்வர தொழிலதிபர்களிடம் பரிசுப் பொருட்கள் வாங்கிய குற்றச்சாட்டு அவரை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது உள்ள அரசை களைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க பிரதமர் நெதன்யாஹு தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முறைப்படி பெஞ்சமின் நெதன்யாஹு அரசை களைக்க நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட வுள்ளது. இதனையடுத்து, ஏப்ரல் 9ம் தேதி பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த போதும், அடுத்த முறையும் நெதன்யாஹு அரசே வெற்றி பெறும் என்று அந்நாட்டின் அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ஆட்சியைக் களைத்து மீண்டும் தேர்தலை சந்திப்பது என்ற முடிவை கூட்டணிகள் ஒருமனதாக எடுத்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறியுள்ளார். மேலும், மீண்டும் இதே கூட்டணி ஆட்சியில் அமரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.